கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பால பணிக்காக கடைகள் அகற்றம்


கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பால பணிக்காக கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 17 July 2018 11:47 PM GMT (Updated: 17 July 2018 11:47 PM GMT)

கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பால பணிக்காக 6 கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரில் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு திருவள்ளூர், பேரம்பாக்கம் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் தினந்தோறும் பேரம்பாக்கம், சத்தரை, புதுமாவிலங்கை, மப்பேடு, கீழச்சேரி, சிற்றம்பாக்கம், களாம்பாக்கம் போன்ற சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்லமுடியாமல் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வாக கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள், ரெயில் பயணிகள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.

அதைத்தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு கடம்பத்தூரில் ரூ.14½ கோடி மதிப்பீட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டது. இதில் நெடுஞ்சாலை பகுதியில் 25 தூண்களும், ரெயில்வே பகுதியில் 4 தூண்கள் என மொத்தம் 29 தூண்களுடன் 2 ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை பகுதியில் 22 தூண்கள் அமைக்கப்பட்டது. மேலும் ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களுக்கிடையே ரெயில்வே நிர்வாகத்தினர் தூண் அமைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ரெயில்வே மேம்பாலப்பணிக்காக அந்த வழியாக உள்ள 30-க்கும் மேற்பட்ட கடை மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அதிகாரிகள் உரிய நோட்டீஸ் வழங்கி அதற்கான இழப்பீடு பணத்தை வழங்கினார்கள். பெரும்பாலான கடைக்காரர்கள் தங்களது கடைகளை காலி செய்து கொடுத்து விட்டனர். 6 கடைக்காரர்கள் மட்டும் கடைகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த கடைகளை அகற்றும் பணி நடை பெற்றது.

இதற்காக திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை (திட்டங்கள்) உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன், உதவி பொறியாளர் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் செல்வபாரதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் லோகநாதன், பரணி, கிராம உதவியாளர் ரவி என திரளான வருவாய்த்துறையினர் போலீசாருடன் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் கடைகளை இடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த கடைக்காரர்கள் தங்களது கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து போலீசார் தகராறு செய்தவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் அதிகாரிகள் தொடர்ந்து கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலப்பணிக்காக நேற்று கடைகளை அகற்றும் பணியை பயிற்சி கலெக்டர் பிரீத்தி நேரில் பார்வையிட்டார்.

Next Story