தினம் ஒரு தகவல் : குழந்தைகளுக்கு கட்டுப்பாடு


தினம் ஒரு தகவல் : குழந்தைகளுக்கு கட்டுப்பாடு
x
தினத்தந்தி 18 July 2018 8:49 AM IST (Updated: 18 July 2018 8:49 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர்களின் பொறுமையின்மையும், நேரம் செலவழிக்க முடியாத போக்குமே குழந்தைகள் தொலைக்காட்சிக்கு அடிமையாவதற்கு பிரதான காரணங்கள்.

டி.வி.யை போட்டுவிட்டு நம் வேலையை செய்யலாம் என்ற விஷயத்தில் ஆரம்பிக்கின்றது விபரீதம். தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்குள் நுழைந்துவிட்டால் அது அவர்களை இழுத்து சாப்பிட்டுவிடும். அவ்வளவு திறமையான வஸ்துகள் உள்ளே இருக்கின்றன.

இதனால் நாள் ஒன்றிற்கு இத்தனை மணி என்ற கட்டுப்பாடு ஆரம்பத்தில் இருந்தே அமலுக்கு வர வேண்டும். இது மிக அவசியம். என்ன நிகழ்ச்சி, எந்த சேனலைக் குழந்தைகள் பார்க்கலாம் என்ற தேர்வு பெற்றோர் கையில் உள்ளது. அதனை பார்க்க மட்டும் அனுமதிக்க வேண்டும். அந்த சேனலை டி.வி. பெட்டியில் ட்யூன் செய்து வராமல் செய்துவிடலாம். சில நிகழ்ச்சிகளில் மொழி மிக மோசமாக உள்ளது. சில நிகழ்ச்சிகள் இன்னும் வளர்ந்துவிட்ட பின்னரே பார்க்கலாம் என்றும் இருக்கும்.

தொலைக்காட்சியை பார்த்து என்ன உள்வாங்கி இருக்கிறார்கள் என்பதை அடிக்கடி பரிசோதனை செய்ய வேண்டும். அது பரிசோதனை என்று அவர்களுக்குத் தெரியக்கூடாது. நிகழ்ச்சியின் பெயரைக்கூறி அதில் வரும் கதையினை கூறச் சொல்ல வேண்டும். குழந்தைகள் அவர்கள் பார்த்ததை கூறுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உள்வாங்கியதில் கதை, வார்த்தைகள், கருத்துகள், புதிய மிருகங்கள், பெயர்கள் ஆகியவை பெற்றோருக்கு விளங்கும். அவற்றை பற்றிய புரிதலும் பெற்றோருக்கு அவசியம். கார்ட்டூன் கேரக்டர்கள் மீது மோகம் வராமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம். நமக்குத் தெரியாமல் அது ஒரு வியாபார பொருளாகி வருகின்றது. டோரா, சோட்டா பீம், வேர்டுகேர்ள் போன்றவை பொதிந்த பொருட்கள் குழந்தைகளை குறிவைத்து தினமும் சந்தையில் வந்து கொண்டிருக்கின்றன.

நாம் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் குழந்தைகளையும் கூட அமர்த்திக் கொண்டு, அவர்கள் மனங்களை பாதிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை சுயநினைவுடன் தவிர்க்கவும். முடிந்தமட்டில் குழந்தைகள் டி.வி. பார்க்கும்போது பெற்றோர் யாரேனும் ஒருவர் உடன் அமர்வது சிறந்தது. உங்கள் இருப்பு அங்கே முக்கியம். டி.வி.யில் காட்சி ஓடும்போதே கண்களை மூடிக்கொண்டு, குழந்தையை விவரிக்கச் சொல்லுங்கள். ஆரம்பத்தில் கடும் தடுமாற்றம் இருக்கும். கொஞ்ச நேரத்திற்கு பிறகு குழந்தை கண்ணை மூடிவிட்டு, பெற்றோர் விவரிக்க வேண்டும். அந்த விவரிப்புகள் குழந்தைகள் என்னென்ன கவனிக்கலாம் என்பதை விளக்க வேண்டும்.

தொலைக்காட்சியை கொண்டு நிச்சயம் இந்த உலகின் விஸ்தாரத்தை, பிரமாண்டத்தை, அழகினை, தெரிந்துகொள்ள வேண்டியவற்றை, வாழ்க்கையில் வேண்டிய நம்பிக்கையை குழந்தைகளுக்கு காட்டலாம். கற்பனை வளத்தை கூட்டலாம். உடனடியாக நேரில் காண முடியாததை காட்சிகளைக் காட்டலாம். 

Next Story