பூங்கா அருகே குளம்போல தேங்கி நிற்கும் கழிவுநீர் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம்சுளிப்பு


பூங்கா அருகே குளம்போல தேங்கி நிற்கும் கழிவுநீர் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் முகம்சுளிப்பு
x
தினத்தந்தி 18 July 2018 10:45 PM GMT (Updated: 18 July 2018 6:18 PM GMT)

பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் பகுதியில் அம்மா பூங்கா அருகே குளம் போல தேங்கிநிற்கும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுஉள்ளது.

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சி அம்மா பூங்கா அருகே பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் சேதுபதி நகர் வடக்கு 1-வது பிரதான சாலையில் மாணவர்கள் விடுதிக்கு அருகில் நீண்டகாலமாக கழிவுநீர் குளம்போல தேங்கி நிற்கிறது.

இந்த தண்ணீர் செல்ல வழியில்லாததால் நாளடைவில் அவற்றின் நிறம் மாறி தற்போது கடும் துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. இவ்வாறு மாணவர்கள் விடுதியை சுற்றிலும் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால் அதில் தங்கியுள்ள மாணவர்களும், அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இந்த கழிவுநீர் அப்பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி, கிணறு போன்றவற்றையும் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த தண்ணீரிலும் கழிவுநீர் கலந்து பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது. இதுதவிர கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வழியாக பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கடந்து செல்கின்றனர். முகம் சுளிக்கிறார்களே தவிர எவ்வித நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த கழிவுநீரை அகற்றி நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும், இனிமேல் இங்கு கழிவுநீர் தேங்காதவாறு வாருகால் வசதி ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story