வரைவு பட்டியல் வெளியீடு: 31 வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு ஆட்சேபனைகளை 24-ந் தேதிக்குள் தெரிவிக்க வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 31 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆட்சேபனைகளை 24-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம், என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 31 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆட்சேபனைகளை 24-ந் தேதிக்குள் தெரிவிக்கலாம், என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
அனைத்து கட்சி கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, வரைவு வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 1562 வாக்குச்சாவடிகள் உள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, கிராமப் பகுதியில் 1200 மற்றும் நகரப் பகுதியில் 1400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கவும், வாக்காளர்கள் குறைவாக உள்ள வாக்குச்சாவடிகளை இணைக்கவும், வாக்காளர்கள் கூடுதலாக உள்ள பாகத்தில் இருந்து, குறைவாக உள்ள பாகத்துக்கு சில பகுதிகளை மாற்றம் செய்தல், வாக்குச்சாவடி மாற்றம் மற்றும் கட்டிட மாற்றம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வாக்குச்சாவடி
அதன்படி, மாவட்டத்தில் 31 வாக்குச்சாவடிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. சீரமைப்புக்கு பின் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,593 ஆக உயர்ந்து உள்ளது. இந்த வாக்குச்சாவடி பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் வருகிற 24-ந் தேதிக்குள்(செவ்வாய்க்கிழமை) எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். ஆட்சேபனை மற்றும் கருத்துக்கள் தெரிவிக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வருகிற 24-ந் தேதி இறுதி வாக்குச்சாவடி பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
எந்திரங்கள் வருகை
மேலும் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 3 ஆயிரத்து 970 வாக்குப்பதிவு எந்திரகளும், 2 ஆயிரத்து 150 கட்டுப்பாட்டுக் எந்திரங்களும், 2 ஆயிரத்து 150 வாக்காளர் வாக்குப்பதிவை சரிபார்க்கும் எந்திரங்களும், (வி.வி.பேட்) வந்து உள்ளன. இவை அனைத்தும் அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தியாகராஜன், தேர்தல் பிரிவு தாசில்தார் நாகராஜன், அ.தி.மு.க. மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் என்.சின்னத்துரை, வடக்கு மாவட்ட தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story