டாக்டர்களுக்கும் சட்ட அறிவு அவசியம் முதன்மை நீதிபதி இளங்கோவன் பேச்சு
டாக்டர்களுக்கும் சட்ட அறிவு அவசியம் என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
டாக்டர்களுக்கும் சட்ட அறிவு அவசியம் என்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் தெரிவித்தார்.
சட்ட விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ‘ராக்கிங்’ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி டீன் ராமசுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் பேசியதாவது:-
விழிப்புணர்வு
எங்கெல்லாம் ஒழுக்கம் இல்லையோ அங்கெல்லாம் சட்டம் இல்லை. எங்கெல்லாம் சட்டம் இல்லையோ அங்கெல்லாம் சமுதாயம் இல்லை என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நாம் ஒவ்வொரு நாளும் சட்டத்தை பின்பற்றி வருகிறோம். இந்திய சட்டங்கள் கோர்ட்டு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனிமனித உரிமை போன்று மாணவர்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட்டு உள்ளன. நீதிபதிகளாகிய நாங்கள் நீதிமன்றத்தை விட்டு மக்கள் மன்றத்துக்கு வந்து சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
நீதிபதிகள் மட்டுமின்றி, மாணவர்களும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். மாணவர்கள் பள்ளியில் இருந்து மருத்துவ கல்லூரிக்கு வரும் போது, புதிய மலர்களாக, தென்றலாக வருகிறார்கள். அவர்கள் அதே நோக்கத்தில் செல்ல வேண்டும். சிலர் சீனியர், ஜூனியர் என்ற பாகுபாட்டை கற்பனையாக ஏற்படுத்திக் கொண்டு மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். அது சகிக்கக்கூடிய அளவுக்கு இருந்தால் பரவாயில்லை. மாணவர்கள் மனம், உடல் நோகும்படியான செயல்கள் நடக்கிறது.
தடுப்பு சட்டம்
இதனால் ‘ராக்கிங்’ தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு கல்லூரிகளில் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. சட்டம் என்பது மனிதனை திருத்துவதற்குதான். மனிதனை தண்டிப்பதற்கானது அல்ல. ராக்கிங் தடுப்பு சட்டம் தண்டிக்கும் சட்டம் அல்ல. மாணவர்கள் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட தடுப்பு சட்டம் தான். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் படிப்பு ஒன்றையே குறிக்கோளாக கொள்ள வேண்டும். ராக்கிங் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. ராக்கிங் செய்தால் கல்லூரி நிர்வாகம் 3 நாட்களுக்குள் விசாரித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும். கல்லூரிகளில் ‘ராக்கிங்’ கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.
மருத்துவத்துக்கும், சட்டத்துக்கு அதிக நெருக்கம் உள்ளது. இரண்டும் 2 கண்களாக உள்ளது. காயம் வழக்குகளில் டாக்டர்களின் பங்கு அதிகமாக உள்ளது. ஆகையால் டாக்டர்களுக்கும் சட்ட அறிவு அவசியம். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் தங்கள் உரிமைகளை மட்டும் நிலைநாட்டாமல், தங்கள் கடமையையும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் திரளான மருத்துவக்கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சாமுவேல் பெஞ்சமின் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story