தேவகோட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தேவகோட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தேவகோட்டை,
தேவகோட்டை பஸ் நிலையம், திருப்பத்தூர் சாலை, சரஸ்வதி வாசக சாலை, வாடியார்வீதி, தியாகிகள் சாலை, தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து போக்குவரத்து நெருக்கடி அதிகஅளவில் இருந்து வந்தது. இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து தேவகோட்டை பகுதி பொதுமக்கள் சார்பில் தமிழக உள்துறைக்கு புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவின் பேரில் தேவகோட்டையில் நேற்று பஸ் நிலையத்தில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கியது. இதை தேவகோட்டை நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு), நகர் அமைப்பு ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதையொட்டி தேவகோட்டை டவுன் போலீஸ் முத்துக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தேவகோட்டை நகர் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னர் திருப்பத்தூர் சாலை பகுதி விசாலமாக தெரிந்தது. இனி இதுபோல் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது போக்குவரத்து போலீசார் மூலம் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது.
Related Tags :
Next Story