வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு வள்ளியூர் கோர்ட்டு உத்தரவு
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வள்ளியூர் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
வள்ளியூர்,
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வள்ளியூர் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
வழக்கு
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் இக்னேசியஸ் ஆலன் டோனி. இவரை கடந்த 26.4.2014 அன்று அதே ஊரை சேர்ந்த பாபு என்ற கணேஷ்பாபு மற்றும் 4 பேர் வழிமறித்து தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இக்னேசியஸ் ஆலன் டோனி பணகுடி போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து அப்போதைய பணகுடி சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதுதொடர்பான வழக்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணை அதிகாரி அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தற்போது சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
பிடிவாரண்டு
இதற்கிடையே, அவர் உரிய நேரத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருவதால் வழக்கு விசாரணை காலதாமதம் ஆகி வருகிறது. இந்த நிலையில் எதிர் மனுதாரர் பாபு என்ற கணேஷ்பாபு வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி வழக்கு விசாரணைக்கு நேற்று ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிக்கு வள்ளியூர் கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் விஜயகுமாரி நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பலமுறை சம்மன் அனுப்பியும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த விஜயகுமாரிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story