விருதுநகர் வேலாயுத ஊருணி வரத்து கால்வாயை குடிமராமத்து மூலம் தூர்வார வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை


விருதுநகர் வேலாயுத ஊருணி வரத்து கால்வாயை குடிமராமத்து மூலம் தூர்வார வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 18 July 2018 10:30 PM GMT (Updated: 18 July 2018 7:15 PM GMT)

விருதுநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள வேலாயுத ஊருணிக்கான வரத்து கால்வாயை குடிமராமத்து முறை மூலம் தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மையப்பகுதியில் வேலாயுதஊருணி அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள சொக்கநாதசாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட இந்த ஊருணியில் நீரை தேக்கி வைத்தால் நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் உயர வாய்ப்பு ஏற்படும். ஆனால் நெடுங்காலமாக இந்த ஊருணி மராமத்து செய்யப்படாமல் குப்பைகளை கொட்டும் இடமாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் சொக்க நாத சாமி கோவில் அறக்கட்டளைதாரரான பஞ்சுகடை மகமை மூலம் இந்த ஊருணி தூர் வாரப்பட்டுள்ளது. ஆனால் ஊருணிக்கு நீர்வரத்து இல்லாத நிலை உள்ளது.


இந்த ஊருணிக்காக வரத்து கால்வாய் பேராலி ரோட்டில் இருந்து தொடங்குகிறது. அப் பகுதியில் உள்ள எரசநாயக்கன் ஊருணியில் இருந்து மழைக்காலங்களில் உபரிநீர் இந்த வரத்து கால்வாய் மூலம் வேலாயுத ஊருணிக்கு வரும். ஆனால் இந்த வரத்துகால்வாயினை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலும் வரத்துக்கால்வாய் மண் மேவி உள்ளதாலும் பேராலி ரோட்டில் இருந்து வேலாயுத ஊருணிக்கு தண்ணீர் வர வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே இந்த வரத்து கால்வாயை தூர்வார வேண்டிய நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த வரத்து கால்வாயை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும். சில அமைப்பினர் இந்த வரத்து கால்வாயை தூர்வார ஒத்துழைப்பு தர உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் குடிமராமத்து முறைப்படி இந்த வரத்து கால்வாயை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் வேலாயுத ஊருணியில் நீர் தேங்கி நின்று நகரின் மையப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

Next Story