மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேசிய தரமதிப்பீட்டு குழுவினர் இன்று முதல் ஆய்வு துணைவேந்தர் பாஸ்கர் பேட்டி


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேசிய தரமதிப்பீட்டு குழுவினர் இன்று முதல் ஆய்வு துணைவேந்தர் பாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 19 July 2018 2:45 AM IST (Updated: 19 July 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேசிய தரமதிப்பீட்டு குழுவினர் இன்று முதல் ஆய்வு நடத்துகிறார்கள்.

பேட்டை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேசிய தரமதிப்பீட்டு குழுவினர் இன்று முதல் ஆய்வு நடத்துகிறார்கள்.

துணைவேந்தர் பேட்டி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் நேற்று மாலையில் பல்கலைக்கழக செனட் அரங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேசிய தரமதிப்பீட்டு குழுவினர் (நாக் கமிட்டி) நாளை (அதாவது இன்று) முதல் 21-ந் தேதி வரை ஆய்வு செய்கிறார்கள். பல்கலைக்கழக தரவரிசை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த குழுவில் 6 பேர் இடம் பெறுவார்கள்.

இந்த குழுவினர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி கல்வி குறித்தும், ஆய்வுக்கூட வசதிகள், முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு, பேராசிரியர்கள், மாணவர்கள் இடையேயான நல்லுறவு, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை சங்கம், உடற்பயிற்சி கூடம், உள்விளையாட்டு அரங்கு, ஸ்மார்ட் வகுப்பறை, இலவச வை-பை வசதி உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்வார்கள். அதிகபட்சமாக ‘ஏ++’ அந்தஸ்து பல்கலைக்கழகத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் மத்திய அரசிடம் இருந்து ரூ.100 கோடி நிதி பெற முடியும். இதேபோல் சிறப்புமிக்க கல்வி நிறுவனங்களுக்கான அந்தஸ்தை பெற விண்ணப்பிக்க முடியும். அந்த அந்தஸ்தை பெறும்பட்சத்தில் மத்திய அரசிடம் இருந்து ரூ.1,000 கோடி நிதி பெற முடியும். ‘ஏ++’ அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு மேற்படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும்.

பட்டமளிப்பு விழா

வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

தற்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம் மாணவர்கள் கூடுதலாகவும், சுயநிதி கல்லூரிகளில் கூடுதலாக 10 சதவீதம் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் முகம்மது சாதிக், பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் பலவேசம், முன்னாள் மாணவர் திலீப் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story