ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரி மலையில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு தடை


ஆடி அமாவாசை திருவிழா: சதுரகிரி மலையில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு தடை
x
தினத்தந்தி 18 July 2018 10:15 PM GMT (Updated: 18 July 2018 7:23 PM GMT)

ஆடி அமாவாசை திருவிழாவுக்கு சதுரகிரி மலைக்கு வரும் பக்தர்கள் கோவிலில் இரவு தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,


ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி மலை கோவிலுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு குறித்த கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்தது.

வனத்துறை வன உயிரின காப்பாளர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விருதுநகர், மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த காவல் துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை, சுகாதாரத்துறை, மின்வாரியம், போக்குவரத்து துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட கால நேரத்துக்குள் மட்டுமே பக்தர்கள் சென்று வர வேண்டும் என்றும் கோவிலில் இரவில் தங்குவதற்கு அனுமதிப்பது இல்லை என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட பாதை வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். குடி தண்ணீர் வசதி வனத்துறை மூலமாக செய்து தரப்படும் என்றும் மலைவாழ் பழங்குடியின பனியர் மக்கள் அடங்கிய தாணிப்பாறை சூழல் மேம்பாட்டுக்குழு உறுப்பினர்கள் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வன நலனுக்காக வனத்துறையினருடன் இணைந்து செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Next Story