குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் செல்வவிநாயகர் நகர், சின்னத்தெரு, ஆதிலட்சுமி தெரு, மேலாண்டை தெரு, சிவசங்கர்நகர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மின்மோட்டார் பழுது அடைந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அதிகாரிகள் சரியான முறையில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யாமல் இருந்தனர்.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கடம்பத்தூர் செல்வ விநாயகர் நகர், ஆதிலட்சுமி தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளானவர்கள் தங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாவிடம் அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அவர் விரைவில் அனைவருக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story