பாதாள சாக்கடை திட்டப்பணி முடிந்த இடங்களில் தார்சாலை அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு
திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த இடங்களில் தார்சாலை அமைக்க ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் அரசு ஆஸ்பத்திரி எதிரில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல் பரிசோதனை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் மாடியில் உள்ள அறை பூட்டப்பட்டு உபயோகப்படுத்த முடியாமல் இருந்தது. அந்த அறையை மாவட்ட மறுவாழ்வு மையத்திற்கு கூடுதலாக ஒதுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த அறையை மறுவாழ்வு மையத்திற்கு ஒதுக்க கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலர் ஜெ.செந்தில்குமாரி தலைமை தாங்கினார். மறுவாழ்வு பள்ளி தாளாளர் கீதா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ராமன் கலந்து கொண்டு, கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, காது கேளாதோர் கருவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது :-
தமிழக அரசு மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. சக்கர நாற்காலி, காது கேளாதோர் கருவி, திருமண உதவித் தொகை போன்றவை அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேலூர், திருப்பத்தூரில் மாதந்தோறும் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.
2005-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மையம் மூலம் 7 ஆயிரத்து 341 பேருக்கு சிகிச்சை, அடையாள அட்டை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 612 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தொகை, 25 மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, டாக்டர் சந்திரா, ஆர்.கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் உதவி மேலாளர் ராஜகணபதி நன்றி கூறினார்.
தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு காப்பகத்திற்கு கலெக்டர் ராமன் சென்றார். அவரை காப்பக நிர்வாகி ரமேஷ் வரவேற்றார். அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, பயிற்சி குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்து பசுமைநகரில் உள்ள எஸ்.ஆர்.டி.பி.எஸ். தொண்டு நிறுவனத்திற்கு சென்று, அங்கு பராமரிக்கப்படும் பச்சிளங்குழந்தைகளை பார்வையிட்டார். மேலும் ஆதரவற்ற பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அவருடன் தாசில்தார் சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் சென்றிருந்தனர்.
பின்னர் கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறுகையில், “திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம் நடத்தப்படும், தார்சாலை அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை முடிந்த பகுதிகளில் கழிவுநீர் குழாயை அதில் இணைத்தபின் தார்சாலை போடப்படும்” என்றார்.
Related Tags :
Next Story