காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் குமாரசாமி டெல்லியில் ஆலோசனை நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டுகோள்
காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் குமாரசாமி டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு,
காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் குமாரசாமி டெல்லியில் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப குமாரசாமி வேண்டுகோள் விடுத்தார்.
கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம்சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்திற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த எதிர்ப்புடன் 2 பிரதிநிதிகளை கர்நாடக அனுப்பி வைத்தது. ஆயினும் நாடாளுமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து விவாதித்து அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து விவாதிக்க கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் 18–ந் தேதி(அதாவது நேற்று) நடைபெறும் என்று குமாரசாமி அறிவித்தார். அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த கர்நாடக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் நேற்று நடைபெற்றது. குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
வேண்டுகோள் விடுத்தார்இதில் பேசிய குமாரசாமி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் கர்நாடகத்திற்கு பாதகமாக உள்ள அம்சங்களுக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்புமாறு எம்.பி.க்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் காவிரி ஆணையத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது குறித்தும் எம்.பி.க்களின் கருத்தை குமாரசாமி கேட்டு அறிந்தார்.
இது தவிர மத்திய அரசிடம் இருந்து கர்நாடகத்திற்கு வரவேண்டிய நிதி மற்றும் மாநில வளர்ச்சிக்கு அதிக நிதி பெற்று தருவது குறித்தும் உதவி செய்யுமாறு குமாரசாமி கேட்டுக் கொண்டார். கர்நாடகத்தின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதாக எம்.பி.க்கள் உறுதியளித்தனர்.
உரிமையை நிலைநாட்ட வேண்டும்கூட்டத்திற்கு பிறகு முதல்–மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
காவிரி மேலாண்மை ஆணைய விவகாரத்தில் கர்நாடக எம்.பி.க்கள் மற்றும் மேல்–சபை உறுப்பினர்கள் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் கர்நாடகத்தின் பலத்த நாம் காட்ட வேண்டும். மாநிலத்தில் உள்ள நிலம், நீர் மற்றும் வளங்களை காப்பாற்ற வேண்டும். அவற்றை பாதுகாக்க வேண்டும்.
இதற்கு மாநில தலைவர்கள் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபடுவது அவசியம். காவிரி விவகாரத்தில் சரியான திசையில் போராடி கர்நாடகத்தின் உரிமை மற்றும் நீதியை நிலைநாட்ட வேண்டும்.
நம்புகிறேன்இதுபற்றி நான் எம்.பி.க்களிடம் பேசி எடுத்துரைத்தேன். மேலும் கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்தும், மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு தேவையான நிதியையும், திட்டங்களையும் பெற்றுத்தருவது குறித்தும் விரிவாக பேசினேன். விவசாயிகளின் பிரச்சினைகள், விவசாயக்கடன் தள்ளுபடி, அணைகள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள், காவிரி–கிருஷ்ணா நதிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் கண்டிப்பாக குரல் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்–மந்திரி குமாரசாமி கூறினார்.
கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மேல்–சபை காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடா, ரமேஷ் ஜிகஜினகி உள்பட கர்நாடக எம்.பி.க்கள், மேல்–சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.