‘தடா’ சட்டத்தில் கைதானவரை விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் பஞ்சாப் முதல்–மந்திரி, குமாரசாமிக்கு கடிதம்


‘தடா’ சட்டத்தில் கைதானவரை விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் பஞ்சாப் முதல்–மந்திரி, குமாரசாமிக்கு கடிதம்
x
தினத்தந்தி 19 July 2018 4:00 AM IST (Updated: 19 July 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

‘தடா‘ சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளவரை விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்–மந்திரி அம்ரிந்தர் சிங், கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு, 

‘தடா‘ சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளவரை விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்–மந்திரி அம்ரிந்தர் சிங், கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

‘தடா‘ சட்டத்தில் கைது

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜல்லுபூர் கேரா கிராமத்தை சேர்ந்தவர் கூர்தீப் சிங் கேரா (வயது 57). இவர் டெல்லி, கர்நாடக மாநிலம் பீதர் பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக 1996–ம் ஆண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், அவர் ‘தடா‘ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கைதான கூர்தீப் சிங் கேராவுக்கு, கோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது. அவர் கலபுரகியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், மனிதாபிமான அடிப்படையில் தன்னை பஞ்சாப் மாநில சிறைக்கு மாற்ற வேண்டும் என்று கூர்தீப் சிங் கேரா கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற கர்நாடக அரசு அவரை கடந்த 2015–ம் ஆண்டு கலபுரகி சிறையில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் சிறைக்கு மாற்றியது. தற்போது கூர்தீப் சிங் கேரா அமிர்தசரஸ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

கடிதம்

இந்த நிலையில், பஞ்சாப் முதல்–மந்திரி அம்ரிந்தர் சிங், கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ‘தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு அமிர்தசரஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூர்தீப் சிங் கேராவை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் அம்ரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜேவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ‘ராஜஸ்தான் சிறையில் உள்ள ஹர்னிக் சிங் பாப் என்பவரை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிறைக்கு மாற்ற அனுமதி கொடுக்க வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.


Next Story