தொடர் திருட்டு எதிரொலி: போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் டி.ஐ.ஜி. உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நகை பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் ஈடுபடுவதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்று விடுகின்றனர்.
நேற்று முன்தினம் திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியில் ஒரு வீட்டில் கொள்ளையடிக்க முயன்றபோது, அதில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். மேலும் சிலர் காரில் தப்பிச்சென்றுவிட்டனர். விசாரணையில் பிடிபட்டவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல் குமார் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொள்ளை, நகைப்பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றால் எந்த நேரமும் போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேக நபர்கள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் அறிவுறுத்த வேண்டும்.
இரவு மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அப்போது சந்தேகப்படும் வகையில் யார் சுற்றித்திரிந்தாலும், அவர்களை பிடித்து தீர விசாரிக்க வேண்டும். வெளி மாவட்டம், மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களிடம் உள்ள அடையாள அட்டை, முகவரி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story