வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற பெண் வியாபாரி உள்பட 4 பேர் கைது


வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற பெண் வியாபாரி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 19 July 2018 4:15 AM IST (Updated: 19 July 2018 3:01 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற பெண் வியாபாரி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

திரு.வி.க. நகர்,

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் 9-வது பிளாக் பகுதியில் வசிப்பவர் வேல்அழகி(வயது 55). பிரபல கஞ்சா வியாபாரியான இவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஞ்சா கடத்தி வந்தபோது போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பேசின்பிரிட்ஜ் போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இதையடுத்து போலீசார், அதிரடியாக அவரது வீட்டுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.


அப்போது வேல்அழகி வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து கஞ்சா வியாபாரி வேல்அழகி, அவரிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்து வந்த அதே பகுதியை சேர்ந்த ராணி(55), கண்ணப்பர் திடலை சேர்ந்த பூங்காவனம்(45) மற்றும் சிவலிங்கம் (54) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேல்அழகி வீட்டில் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். பின்னர் கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


* புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜாகீர் உசேன் (48) என்பவரது கார் பேட்டரிகடையில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள பேட்டரிகளை திருடிச்சென்றனர்.

* அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மேதலா(53) என்பவர் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்றனர்.

* அம்பத்தூர் பகுதியில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த டானாதேவ்(31) என்பவர் மாடியில் தூங்கியவர் நேற்று காலை எழுந்தபோது தவறி விழுந்து இறந்தார்.

* மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த எலினால்(40) தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் ராஜகீழ்ப்பாக்கம் அருகே வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரூ.12 ஆயிரத்து 500 வைத்திருந்த அவரது பையை பறித்து சென்றனர்.

* புழல் ஏரியில் அரைகுறையாக மூழ்கி கிடந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டு விசாரித்து வருகிறார்கள்.


* சென்னையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டார்.

* புளியந்தோப்பு பகுதியில் பிரியாணி கடை வைத்திருந்த சையதுதாவூத்(42) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.2,700 இருந்த கல்லாபெட்டி மற்றும் ஒரு செல்போனை பறித்ததாக இளங்கோவன்(43), தீபக்(24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகிறார்கள்.

* தரமணி பெரியார் நகரில் தெருகுழாயில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் ஜெயகரன் என்பவரை கணேஷ் என்பவர் உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதை தடுக்க வந்த அவரது மனைவி சுந்தரியும் தாக்கப்பட்டார். கணேசை போலீசார் கைது செய்தனர்.

* வேளச்சேரியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் விலை உயர்ந்த 7 செல்போன்கள் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

* பெரம்பூர் பகுதியை சேர்ந்த தொழிலாளியான நெடுஞ்செழியன்(47) மதுபோதையில் இந்துக்கல்லூரி ரெயில் நிலையத்தில் ரெயிலில் ஏறியபோது தவறி விழுந்ததில் அவரது 2 கால்களும் நசுங்கியது.

* நீலாங்கரை பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் டீசல் விற்றதாக சிறுசேரியை சேர்ந்த ரமேஷ்(35) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.

* முகப்பேர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரான வெங்கடேசன்(40) நேற்று செனாய்நகரில் நின்றபோது அவரது செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்து சென்றனர்.

* எண்ணூரில் தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி தனசேகர்(40) குறித்து போலீசார் வக்கீல்களிடம் விசாரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் எர்ணாவூர் மேம்பாலத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 40 வக்கீல்கள் கைது செய்யப்பட்டனர்.

* புழல் பகுதியில் கஞ்சா விற்றதாக முருகன்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* மதுராந்தகம் அடுத்த சோத்துப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் முத்துகுமார் (60) என்பவரை கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த அரும்பாக்கத்தை சேர்ந்த அனித்குமார் (31), தரமணியை சேர்ந்த ஏழுமலை (38), குன்றத்தூரை சேர்ந்த ரவி (எ) நாகராஜ் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி உள்ளிட்ட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

* தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை அருகே மெட்ரோ ரெயில் பணிக்காக பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது.

* அடையாறில் உள்ள பிரபல வணிக வளாகத்தின் 2-வது மாடியில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.



Next Story