வடமதுரை அருகே, முன்விரோதத்தில் பக்கத்து வீட்டு பெண்ணின் முடியை வெட்டியவர் கைது
வடமதுரை அருகே முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணின் தலைமுடியை வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமதுரை அருகேயுள்ள மோளப்பாடியூரை சேர்ந்தவர் செல்லமுத்து. இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 31). இவர்களுடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுரேஷ் (32). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். செல்லமுத்து வீட்டின் ஜன்னல் வழியாக சுரேஷ் பார்த்துள்ளார். இதை கவனித்த மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஊர் பெரியவர்களிடம் அவர் புகார் தெரிவித்தார். உடனே அவர்கள் சுரேசை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் சுரேசுக்கும், மகாலட்சுமிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு வீட்டுக்கு வெளியே செல்லமுத்து, மகாலட்சுமி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற சுரேஷ் கத்தரிக்கோலால் மகாலட்சுமியின் தலைமுடியை வெட்டியதாக தெரிகிறது. உடனே அவர் விழித்து கொண்டு அலறி கூச்சலிட்டார்.
சத்தம் கேட்டு எழுந்த செல்லமுத்து, சுரேசை பிடிக்க முயன்றார். ஆனால் அவர் அங்கு இருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மகாலட்சுமி வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேசை கைது செய்தனர்.
Related Tags :
Next Story