அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்து விரைவில் முடிவு


அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது  மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்து விரைவில் முடிவு
x
தினத்தந்தி 19 July 2018 4:00 AM IST (Updated: 19 July 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாது என்றும், மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்குவது பற்றி விரைவில் முதல்–மந்திரி முடிவு எடுப்பார் என்றும் மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.

பெங்களூரு, 

அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாது என்றும், மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்குவது பற்றி விரைவில் முதல்–மந்திரி முடிவு எடுப்பார் என்றும் மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.

போராட்டம்

கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மாணவ–மாணவிகளுக்கு மட்டும் அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அனைத்து பிரிவு மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால், மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ்பாஸ் வழங்குவது குறித்து கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகாததால் மாணவ–மாணவிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும், மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவ–மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இலவச பஸ் பாஸ் வழங்காத மாநில அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் வருகிற 21–ந்தேதி பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என்று ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு மாணவ அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விரைவில் இலவச பஸ் பாஸ்

இந்த நிலையில் அனைத்து பிரிவு மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி டி.சி.தம்மண்ணா நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:–

பெட்ரோல்–டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசு பஸ் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த வேண்டும் என்று போக்குவரத்து கழகங்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. பஸ் கட்டண உயர்வு குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். பெட்ரோல்–டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பஸ் கட்டணத்தை உயர்த்துவது என்பது தவிர்க்க முடியாது.

19.60 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்து முதல்–மந்திரி முடிவு எடுப்பார். 1–ம் வகுப்பு முதல் 7–ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் எந்த தடங்கலும் இல்லை. உயர்நிலைப்பள்ளி மற்றும் பி.யூ.கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவது குறித்து விரைவில் முதல்–மந்திரி முடிவு எடுப்பார்.

போக்குவரத்து ஆய்வாளர்கள்

கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்கள் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. அதனால் போக்குவரத்து துறைக்கு தேவையான நிதி உதவியை வழங்குமாறு முதல்–மந்திரியிடம் கேட்போம். இலவச பஸ் பாஸ் திட்டத்திற்கு நிதி உதவி அளிப்பதாக பள்ளி கல்வித்துறை கூறி இருக்கிறது.

இந்த திட்டத்திற்கு மாநில அரசு 50 சதவீத நிதியை வழங்குவது குறித்து முதல்–மந்திரியுடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும். போக்குவரத்து துறையில் 400 போக்குவரத்து ஆய்வாளர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள். இன்னும் காலியாக உள்ள சில பணியிடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படும்.

இவ்வாறு மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.


Next Story