தண்டையார்பேட்டையில் தினகரன்-மதுசூதனன் ஆதரவாளர்கள் மோதல்; கார் மீது கல்வீச்சு பெண் இன்ஸ்பெக்டர் காயம்


தண்டையார்பேட்டையில் தினகரன்-மதுசூதனன் ஆதரவாளர்கள் மோதல்; கார் மீது கல்வீச்சு பெண் இன்ஸ்பெக்டர் காயம்
x
தினத்தந்தி 19 July 2018 3:23 AM IST (Updated: 19 July 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தண்டையார்பேட்டையில் தினகரன், மதுசூதனன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது தினகரன் வந்த கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சில் பெண் இன்ஸ்பெக்டரின் தலையில் காயம் ஏற்பட்டது.


பெரம்பூர்,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளருமான டி.டி.வி.தினகரன், தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழும், இலவசமாக தையல் எந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தண்டையார்பேட்டை இரட்டைகுழி தெருவில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.

தினகரனை வரவேற்பதற்காக பெண்கள் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே குவிந்தனர்.

தினகரன் வருவதை அறிந்து அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மதுசூதனனின் ஆதர வாளர்களான அ.தி.மு.க.வினரும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பான நிலை காணப்பட்டது.


இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள், தடுப்பு வேலிகளை அமைத்து இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினார்கள். இதுபற்றி தினகரனுக்கு தகவல் தெரிவித்த போலீசார், பாதுகாப்புக்காக மாற்று வழியில் வரும்படி கூறினர்.

அதன்படி தினகரன், காசிமேடு சூரியநாராயணன் தெரு, இளையமுதலி தெரு, வைத்தியநாதன் மேம்பாலம் வழியாக வந்து தண்டையார்பேட்டை இரட்டைகுழி தெருவில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் அருகில் வந்தார்.

அப்போது அங்கிருந்த அ.தி.மு.க.வினர் தினகரனை நோக்கி, 20 ரூபாய் நோட்டுகளை காண்பித்தனர். இதனால் தினகரன் ஆதரவாளர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். செருப்பு மற்றும் பாட்டில்களும் வீசப்பட்டன.


தினகரன் வந்த கார் மீதும் கல் வீசப்பட்டது. இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இருபுறமும் கயிறுகளை கட்டி தடுப்பு வேலிகள் அமைத்து இருதரப்பினரையும் போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்கள், தடுப்பு வேலியை தாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட முயன்றனர்.

இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்வீசி தாக்கியதில் எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமாவின் மண்டை உடைந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மேலும் 3 போலீசாரும் கல்வீச்சில் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் உள்பட போலீஸ்காரர்களை உடனடியாக சகபோலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் தண்டையார்பேட்டை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.


இதற்கிடையே அ.தி.மு.க.வினர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

முன்னதாக தினகரன் வந்தபோது தண்டையார்பேட்டை போலீஸ் நிலையம், வைத்தியநாதன் மேம்பாலம் ஆகிய 2 இடங்களிலும் 20 ரூபாய் நோட்டுகளுடன் அ.தி.மு.க.வினர் திரண்டிருந்தனர். இதனால் அங்கும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். தினகரன் வந்தபோது அவர்கள் 20 ரூபாய் நோட்டை காட்ட முயன்றனர். போலீசார் தடுத்ததால் 2 இடங்களிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த மோதல் சம்பவத்தால் தண்டையார்பேட்டை பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story