கோயம்பேட்டில் தண்ணீர் கேன் வினியோகம் செய்வது போல் நடித்து குட்கா விற்றவர் கைது


கோயம்பேட்டில் தண்ணீர் கேன் வினியோகம் செய்வது போல் நடித்து குட்கா விற்றவர் கைது
x
தினத்தந்தி 19 July 2018 3:30 AM IST (Updated: 19 July 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில் தண்ணீர் கேன் வினியோகம் செய்வது போல் நடித்து கடைகளில் குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,


சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற போதை பொருட்கள் ரகசியமாக வாகனங்களில் கொண்டு வந்து கடைகளுக்கு வினியோகம் செய்வது மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன.

இதையடுத்து கோயம்பேடு உதவி கமிஷனர் ஜான்சுந்தர் உத்தரவின்பேரில் கோயம்பேடு இன்ஸ்பெக்டர் தமிழழகன் தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.


அப்போது கோயம்பேடு மார்க்கெட்டில், தண்ணீர் கேன்கள் வினியோகம் செய்யப்படும் என எழுதி இருந்த ஒரு சரக்கு வேனை சந்தேகத்தின்பேரில் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

அப்போது சரக்கு வேனின் உள்ளே இருந்து குட்கா வாசனை வீசியதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாகனத்தை திறந்து பார்த்தனர். அப்போது பெரிய, பெரிய பெட்டிகளில் குட்கா மற்றும் பான் மசாலாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை, சரக்கு வேனுடன் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.


அதில் அவர், மாங்காடு அம்பாள் நகர், பாலாஜி அவென்யூ பகுதியை சேர்ந்த ஜெயராம் (வயது 37) என்பதும், ஐதராபாத்தில் இருந்து குட்கா போன்றவற்றை லாரிகளில் கடத்தி பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் கொண்டு வருவார்.

பின்னர் அங்கிருந்து அவற்றை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு கோயம்பேடு மார்க்கெட், மூலக்கடை, மதுரவாயல் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.


போலீசார் சந்தேகப்படாமல் இருக்க வாகனத்தில் தண்ணீர் கேன்கள் வினியோகம் செய்யப்படும் என ஒட்டி, தண்ணீர் கேன்கள் கொண்டு செல்வதுபோல நடித்து, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்றதும் விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து ஜெயராமை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான ஜெயராமை சிறையில் அடைத்தனர்.

Next Story