பல்கலைக்கழக மானியக்குழு விதிகளில் திருத்தம் செய்ததற்கு இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பல்கலைக்கழக மானியக்குழு விதிகளில் திருத்தம் செய்ததற்கு இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 July 2018 11:30 PM GMT (Updated: 18 July 2018 10:07 PM GMT)

பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதற்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யூ.ஜி.சி.) விதிகளை பின்பற்றி இயங்கி வருகின்றன. யூ.ஜி.சி. விதிகளில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதில் தொலைநிலைக்கல்வி திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் நாக் கமிட்டியின் 3.26 நட்சத்திர புள்ளி பெற்றிருக்க வேண்டும்.

நட்சத்திர புள்ளிகள் என்பது கல்வி நிறுவனத்தின் அடிப்படை வசதி, உள்கட்டமைப்பு, ஆசிரியர்-மாணவர்கள் விகிதம், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த விதிகள் தொலைநிலைக்கல்வி திட்டத்திற்கு பொருந்தாது.

யூ.ஜி.சி. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தால் பெரும்பாலான பல்கலைக் கழகங்கள் தொலைநிலைக் கல்வி வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் நிர்ணயிக்க வேண்டியது வரும். இதனால் ஏழை மாணவர் களின் கல்வி பாதிக்கும். எனவே யூ.ஜி.சி. விதிகளில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைச்சாமி, அனிதாசுமந்த் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், யூ.ஜி.சி. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தத்தை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இந்த வழக்கு குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர், யூ.ஜி.சி. செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Next Story