விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணிக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 July 2018 10:19 PM GMT (Updated: 18 July 2018 10:19 PM GMT)

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வாடிப்பட்டி,


வாடிப்பட்டி தாலுகா அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மண்டல துணை தாசில்தார் கமலேஷ் தலைமை தாங்கினார். தேர்தல் பிரிவு தாசில்தார் தெய்வேந்திரன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திடீர் என்று நிறுத்தப்பட்ட திருவாலவாயநல்லூர் பஸ்சை மீண்டும் இயக்கவேண்டும் என்றும், வடகரைக்கண்மாய் கடை மடை பகுதிகளில் வரத்துகால்வாய்கள் தூர்வாராததால் பெரியாறுபாசனகால்வாய் தண்ணீர் வந்துசேரவில்லை என்றும் அதை சீரமைக்கவேண்டும் என்றும், வாடிப்பட்டி கச்சைகட்டி சாலையில் வேகத்தடை அமைக்கவேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் விராலிப்பட்டி சாலையை சீரமைப்பதோடு அதன்பிரிவில் உள்ள பாலத்தை விரிவு படுத்த வேண்டும், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியபகுதிகளில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் தினந்தோறும் ஏற்படும் மின்தடையை சீர்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதேபோல உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணை தாசில்தார் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார். உசிலம்பட்டி விவசாயிகளின் நீண்டநாள் கனவுத்திட்டமான 58 கிராம கால்வாய்த்திட்டத்தின் தொட்டிப்பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும், தொட்டிப்பாலத்தின் வழியாக தண்ணீர் அனுப்பி சோதனை ஓட்டம் பார்க்கவேண்டும். அப்போதுதான் கசிவு இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிய முடியும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இ-சேவை மையங்களில் பதிவு செய்யப்பட்ட சாதிச்சான்றிதழ், வருமானசான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் கிடைக்க தாமதமாகிறது. எனவே பொதுமக்களை அலைக்கழிக்காமல் உடனடியாக சான்றிதழை குறித்த நாளில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும் உசிலம்பட்டி பகுதியில் பூக்களை பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


இதனைத்தொடர்ந்து பூக்களை பதப்படுத்துவதற்காக தமிழக அரசு மதுரை மாவட்டத்திற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது என தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியன் தெரிவித்தார். இது குறித்து தாசில்தார் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், விவசாயிகள் கூறியுள்ள அனைத்து கோரிக்கைகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story