பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின் ஆட்சிப்பேரவை பிரதிநிதிக்கான தேர்வில் சர்ச்சை


பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவின் ஆட்சிப்பேரவை பிரதிநிதிக்கான தேர்வில் சர்ச்சை
x
தினத்தந்தி 18 July 2018 10:23 PM GMT (Updated: 18 July 2018 10:23 PM GMT)

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தேடுதல் குழு ஆட்சிப்பேரவை பிரதிநிதிக்கான தேர்வு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை,


மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் நியமனம் செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், தமிழக அரசு சார்பில் 3 மாதத்துக்குள் துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்து புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் துணைவேந்தர் தேடுதல் குழு அமைக்கப்பட்டது.

இதில், பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் ஒரு நபர் நியமிக்கப்பட வேண்டும். ஆட்சிப்பேரவை பிரதிநிதிக்கான தேர்தல் வருகிற 25-ந் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் அருள்செல்வன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கணிதவியல் துறை பேராசிரியர் சோமசுந்தரம், திருவனந்தபுரத்தில் உள்ள வளர்ச்சிக்கான கல்வி மையத்தின் பேராசிரியர் இருதயராஜன் ஆகியோர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்.

மனுக்களை வாபஸ் பெற கடந்த 13-ந்தேதி கடைசி நாளாகும். இதற்காக கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழு ஆட்சிப்பேரவை பிரதிநிதிக்கான தேர்தலில், வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் யார் என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.


காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கலைச்செல்வன் கூறும்போது, ஆட்சிப்பேரவை பிரதிநிதிக்கான தேர்தல் நடவடிக்கைகளில் வெளிப் படைத்தன்மை இல்லை. மூட்டா சங்கத்துக்கு ஆதரவான பேராசிரியர்களை மட்டும் தேடுதல் குழுவில் நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துணைவேந்தர் தேர்வு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது தேர்தல் நடவடிக்கைகள் ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

இதுகுறித்து கன்வீனர் கமிட்டி தரப்பில் கூறும்போது, தேர்தல் விதிமுறைப்படி மட்டுமே செயல்பட்டு வருகிறோம். தேர்தலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே தகவல் அனுப்பி வைக்கப்படும். அவர்களின் பட்டியல் மட்டுமே வெளிப்படையாக தெரிவிக்கப்படும். வேட்பு மனு நிராகரிக்கப்பட்டவர்கள், ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள், வெற்றி பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்கள் ஆகியோரின் பட்டியல் விதிப்படி வெளியிடப்படாது.


சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே பதிவுத்தபால் மூலம் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த விதிமுறைகள் வேட்பு மனுவுக்கான விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களை முன்மொழிந்தவர்களுக்குக்கூட விதிப்படி தகவல் தெரிவிக்கப்படமாட்டாது என்றனர்.

அதன்படி, ஆட்சிப்பேரவை பிரதிநிதிக்கு விண்ணப்பித்தவர்களில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனின் மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ஆட்சிப்பேரவை பிரதிநிதி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

Next Story