ஓமலூர் அருகே போலி டாக்டர் கைது


ஓமலூர் அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 19 July 2018 4:00 AM IST (Updated: 19 July 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே போலி டாக்டர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ஓமலூர்,

ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகா செம்மாண்டப்பட்டி, தாராபுரம், தாத்தியம்பட்டி, பொட்டியபுரம் ஆகிய பகுதிகளில் போலி டாக்டர்கள் உள்ளதாகசேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணிக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், சேலம் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சத்யா மேற்பார்வையில் ஓமலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பெருமாள், சீயான்குமார் மற்றும் மருத்துவக்குழுவினர் செம்மாண்டப்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள பாலு கிளினிக்கிற்கு நேற்று சென்று பார்த்தனர். அங்கு டாக்டராக இருந்த பாலு என்ற பழனிவேல் பி.எஸ்சி. பட்டப்படிப்பு முடித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து ஓமலூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் அந்த கிளினிக்கில் வைத்திருந்த ஊசி மற்றும் பல்வேறு மருந்து பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஓமலூர் போலீசில் மருத்துவ அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டர் பாலு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் செம்மாண்டப்பட்டி, தாராபுரம், பொட்டிபுரம் ஆசாரிபட்டறை ஆகிய பகுதிகளில் போலி டாக்டர்கள் உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு மருத்துவக்குழுவினர் ஆய்வு செய்ய சென்றனர். ஆனால் அதிகாரிகள் குழுவினர் வரும் தகவலை கேள்விப்பட்ட 4 பேர், தங்கள் கிளினிக்குகளை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் ஆய்வுசெய்து விட்டு மருத்துவக்குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இது குறித்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சத்யா கூறும் போது, ஓமலூர் வட்டாரத்தில் போலி மருத்துவர்கள் உள்ளதாக கலெக்டருக்கு வந்த புகாரின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் பாலு என்ற பழனிவேல் பட்டப்படிப்பு படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அவர் மீது போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளனர். ஏற்கனவே 2 முறை ஆங்கில மருத்துவம் பார்த்ததாக நானே இவரை பிடித்து கொடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை தொடரும்‘ என்றார். 

Next Story