திருப்பூரில் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


திருப்பூரில் 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

திருப்பூரில் 2 கடைகளில் இருந்து 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பைகள், டம்ளர், விரிப்புகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களை மாநகராட்சி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பி.என்.ரோட்டில் உள்ள மொத்த வியாபார மளிகை கடைகளில் நேற்று காலை உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

இதேபோல் மற்றொரு கடையிலும் ½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் ஆலோசனை கூறினார்கள். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story