மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 8 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
திருப்பூரில் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 8 பவுன்நகையை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் பழைய ராமகிருஷ்ணாபுரம் துண்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் வளர்மதி(வயது 48). இவர் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் தனது மொபட்டில் வளர்மதி வீட்டுக்கு புறப்பட்டார். மாலை 6.15 மணி அளவில் குத்தூஸ்புரம் விரிவு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் மர்ம ஆசாமிகள் 2 பேர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். திடீரென்று வளர்மதி அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
வளர்மதி சத்தம் போட்டதும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் மர்ம ஆசாமிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து வளர்மதி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சங்கிலி பறிப்பு ஆசாமிகளுக்கு 25 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சம்பவ இடத்துக்கு அருகே உள்ள கட்டிடத்தில் பொருத்தியிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
Related Tags :
Next Story