நீர்வரத்து சற்று குறைந்தாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது


நீர்வரத்து சற்று குறைந்தாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 19 July 2018 4:43 AM IST (Updated: 19 July 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து சற்று குறைந்தாலும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது.

பவானிசாகர், 

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்ட இந்த அணை 120 அடி உயரம் கொண்டது. சகதி 15 அடி போக 105 அடிக்கு தண்ணீரை தேக்கிவைக்க முடியும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பொழியும்போதெல்லாம் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும்.

அணையில் இருந்து பிரிக்கப்படும் கீழ்பவானி வாய்க்கால் மற்றும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் மூலம் சுமார் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 9 ஆண்டுகளாக நீர்ப்பிடிப்பு பகுதியில் முறையாக மழை பொழியாததால் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டவில்லை.

இந்தநிலையில் இந்த ஆண்டு மழை காலத்தின் தொடக்கத்திலேயே நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அதன் காரணமாக உபரி நீர் அப்படியே பவானிசாகர் அணைக்கு திறந்துவிடப்பட்டது.


தொடர்ந்து மழை பெய்ததால் கடந்த 20 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதனால் அணையின் நீர்மட்டம் 10 ஆண்டுகளுக்கு பிறகு 90 அடியை தாண்டியுள்ளது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 154 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 91.37 அடியாக இருந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு 8,718 கன அடி தண்ணீர் வந்தது. நீர் வரத்து சற்று குறைந்தாலும் அணையின் நீர்மட்டம் 92.11 அடியாக உயர்ந்தது.

ஒவ்வொரு அணைக்கும் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நீர் இருப்பு வைக்க முடியும் என்ற அளவு உள்ளது.

பவானிசாகர் அணையை பொறுத்தவரை ஜூலை மாதம் 100 அடி வரை தண்ணீரை தேக்கிவைக்க முடியும். அதனால் இதேபோல் நீர்வரத்து இருந்தால் இன்னும் 4 நாட்களில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டிவிடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தார்கள். 

Next Story