தினம் ஒரு தகவல் : வேளாண்மையின் தோற்றம்


தினம் ஒரு தகவல் : வேளாண்மையின் தோற்றம்
x
தினத்தந்தி 19 July 2018 8:38 AM IST (Updated: 19 July 2018 8:38 AM IST)
t-max-icont-min-icon

உலகில் ஆதி வேளாண்மை 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது.

ஒருவேளை மனித குலம் வேளாண்மையை கண்டுபிடிக்காமலேயே இருந்திருந்தால், நாம் உயிர் வாழ்வதற்கு இன்றைக்கும் விலங்குகளை துரத்திச் சென்று வேட்டையாட வேண்டியதிருக்கும். உண்மையில் வேட்டையாடுதலும், உணவு சேகரித்தலும் காட்டில் இருந்த நடைமுறைகளை மீறாமல் இருந்ததால், அவை பெரிய பின்விளைவுகளை உருவாக்கவில்லை. குறிப்பிட்ட ஒரு வாழிடத்தில் கிடைத்த இயற்கை ஆதாரங்களை நெகிழ்வுத் தன்மையுடன் பயன்படுத்திக்கொள்ளும் தன்மை, மனிதகுலத்திடம் மரபு வழியாக தொடர்ந்து வந்தது.

அதேநேரம் அவற்றில் இருந்த கட்டுப்பாடு என்னவென்றால், ஒரே இடத்தில் தொடர்ச்சியாக வேட்டையாடவோ, உணவு தேடவோ முடியவில்லை. அதனால் மனித குலம் தொடர்ந்து நகர்ந்துகொண்டேயும், சிறிய குழுவாகவும் வாழ வேண்டியிருந்தது. வேளாண்மை கண்டுபிடிக்கப்பட்டது, மனித சமூகத்தில் நிகழ்ந்த 2-ம் கட்ட புரட்சியாக கருதப்படுகிறது. வேளாண்மை தொடங்கிய காலத்திலும் மனிதகுலம் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்க வேண்டியிருந்தது. அப்போது அதன் பெயர் காட்டெரிப்பு வேளாண்மை. குறிப்பிட்ட ஓரிடத்தில் காட்டை அழித்து, அங்கு வேளாண்மை செய்யப்படும். அந்த நிலத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தீர்ந்தவுடன், வேறொரு நிலப்பகுதியை தேடிச் செல்ல வேண்டும். இதுவே காட்டெரிப்பு வேளாண்மை.

உலக வரலாற்றில் மனிதர்களின் வாழ்க்கை இப்படி இடம்பெயர்ந்துகொண்டே இருந்த நிலையில், அவர்கள் ஒரே இடத்தில் வாழ வழிவகுத்ததும் வேளாண்மைதான். மனித குலம் நதிக்கரைகளில் வேளாண்மை செய்ய பழகிக்கொண்டது, நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது. நதிக்கரை நாகரிகங்கள் உலகை திருப்பிப்போட்டன.

இப்படியாக வேளாண்மை என்பது தனித்த கண்டுபிடிப்பாக இல்லை. தொடர்ச்சியான அறிவியல், தொழில்நுட்ப கண்டறிதல்களுக்கு அது வழிவகுத்தது. எடுத்துக்காட்டாக பாசனமுறை வளர்ச்சி, பயிர் சுழற்சி முறை, பயிர் ஊட்டத்தை அதிகரிக்க உரமிடுதல் போன்றவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் செம்மைப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டன. மனிதகுலம் காட்டுத் தாவரங்களில் இருந்து விதைகளை சேகரித்து, அவற்றை பயிரிட்டு, வளர்த்து, அறுவடை செய்த ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கண்ட கண்டறிதல்கள் ஒவ்வொன்றாக கண்டுபிடிக்கப்பட்டன.

வேளாண்மையில் தொடங்கி, இன்றைக்கு எத்தனையோ புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட பிறகும்கூட, மனிதகுலம் இயற்கை வளங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழித்துக்கொண்டே இருப்பதுதான் இதில் மிகப்பெரிய முரண்பாடு. 

Next Story