வாழ்வில் நிம்மதி வரும் வழி


வாழ்வில் நிம்மதி வரும் வழி
x
தினத்தந்தி 19 July 2018 10:46 AM IST (Updated: 19 July 2018 10:46 AM IST)
t-max-icont-min-icon

‘எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி.. அங்கே எனக்கோர் இடம் வேண்டும்’ என்று தேடிய காலங்கள் மாறி, நிம்மதி இருக்கிறதோ இல்லையோ, பணம், கார், பங்களா, சொகுசு வாழ்க்கை என்று பலர் மேலே பார்த்தபடி அலைகிறார்கள்.

எப்படியாவது சொத்துச் சேர்க்க வேண்டும். எப்படியாவது அவனை விட நாம் பெரிய ஆளாக வேண்டும். எப்படியாவது மனக் குரங்கு ஆட்டி வைக்கிறபடியெல்லாம் ஆடுவதற்கு வழி தேட வேண்டும். இதைத் தவிர வேறு சிந்தனையே இல்லாமல் பல கோடிப் பேர் மாறிப் போன காரணத்தால்தான் இலக்கியங்களை, இதிகாசங்களைப் படிப்பவரும், கேட்பவரும், படைப்பவரும் குறைந்து கொண்ட போகிறார்கள்.

ஆடம்பரமாக இருப்பவர்களைப் பார்த்து அவர்களைப் போல் நம்மால் ஆக முடியவில்லையே என்று பலரும் ஏக்கத்தோடு அலைகிறார்கள். அந்த வாழ்க்கை நிலையானதா? நிம்மதியானதா என்பதை உணர வேண்டாமா? அவரைப் போல் நாம் வரவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. முயற்சி செய்வதும் சரியானதே.

ஆனால் நம்முடைய வாழ்வைப் பற்றிய சிந்தனையைத் தவிர்த்துவிட்டு, அடுத்தவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் நம்முடைய வாழ்வு எப்படி உயர்வடையும். அடுத்தவரைப் பற்றி எப்படி நினைக்க வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. உயர்வாக நினைத்தால் நாம் உயர்வாக வழி பிறக்கும்.

இவனெல்லாம் ஒரு ஆளா? எப்படியோ முன்னேறிவிட்டானே...? என்ன பண்ணியிருப்பான்? என்று பொறாமையால் பொங்கிப் போய் அடுத்தவரைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் முன்னேற்றம் தடைப்படுவதுடன், யாருடனும் மகிழ்ச்சியாகப் பழக முடியாது. வாழ முடியாது.

எல்லாரும் எல்லாமும் பெற்றுவிடவில்லை. அவரவர் படிப்பு, உழைப்பு, முயற்சிக்கு ஏற்பப் பணிகள் கிடைக்கின்றன. குடும்பம் அமைகின்றது. அப்படி அமைகிற வாழ்வில் என்ன தேவை என்பதை உணர வேண்டும். வாழ்வில் என்ன வேண்டும் என்று யாரைக் கேட்டாலும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் கூறுவார்கள்.

ஆனால் எது மகிழ்ச்சி என்று தெரியாமல் தற்காலிகமாகக் கிடைக்கின்ற சின்னச் சின்னச் சந்தோஷங்களில் மகிழ்ச்சியடைகிறார்கள். பிறகு அவனைப் போல் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லையே என்று கவலைப்படுகிறார்கள்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்றே தனக்குக் கிடைத்த உத்தியோகத்தை வாழ்வைக் கீழாக எண்ணி, பிறர் பார்க்கும் பணிதான், பிறர் வாழும் வாழ்வுதான் உயர்ந்தது என்று எண்ணுவது மனக்கவலையை அதிகப்படுத்தும் ஊக்கமருந்தாகும்.

செய்யுந்தொழிலே தெய்வம் என்று எண்ண வேண்டும். அது நல்ல தொழிலாக, நேர்மையான தொழிலாக, நெறிகாக்கும் தொழிலாக இருந்தால் செய்யும் தொழிலே தெய்வம் என்று உணர வேண்டும். சாதி மத வேறுபாடுகளால், ஏற்றத் தாழ்வை விதைத்தது போல் கல்வியால், தொழிலால், பார்க்கும் வேலைகளால், பதவியால் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, மனக்கவலையைக் கருவாக்கி வாழ்வது சரியானதல்ல. அந்த எண்ணத்திலிருந்து மாறவேண்டுமென்றால், ஒரு செய்தியைச் சொல்லியே ஆக வேண்டும்.

செட்டிநாட்டு ஆச்சிமார்கள் ஒரு வரியை அடிக்கடி உச்சரிப்பார்கள். ‘உள்ளதுக்குள்ளே நல்லதாக வாழ வேண்டும்’ என்பதுதான் அந்த வரி. இதில் இருக்கிற வாழ்வியல் தத்துவத்தைக் கடைப்பிடித்தால் நமக்கு நிச்சயம் நிம்மதி கிடைக்கும். இருப்பது போதும் என்று திருப்தியடைந்தால் கவலைக்கு வழியுண்டா? இருப்பதைக்கொண்டு திருப்தியுடன் வாழப் பழக வேண்டாமா?

இப்போது நாமிருக்கும் நிலைதான் உயர்ந்தது எனத் தன்னம்பிக்கையோடு எண்ணிப் பிறர் மீது பொறாமை இன்றி வாழ்கின்றோமே அந்த வாழ்க்கைதான் நிம்மதியைத் தரும்.

அடுத்தவன் வாய்ப்பை எப்படித் தட்டிப்பறிப்பது? அவனை எப்படி வீழ்த்துவது? என்று எண்ணிக் கொண்டிருக்காமல் நாம் இருக்கும் துறையில், பணியில் முழு மனதோடு ஈடுபட்டால், வெற்றி நிச்சயம் என்ற ஒரு கொள்கையை மனதில் உருவாக்கிக் கொண்டால் வாழ்வில் நிம்மதியாக வாழலாம். அதைத்தான்.

‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று கவியரசு கண்ணதாசன் கூறினார். இந்த வரிகளுக்கு இலக்கணமாக எப்படி வாழ்வது என்று சிந்தித்தாலே போதும்.

விமானத்தில் பறக்கிறவன் அதற்கும் மேலே பார்க்க முடியாது. காரில் செல்கிறவனைப் பார்த்து அவனைவிட நாம் மேல் என்று எண்ணலாம். காரில் செல்கிறவன் பைக்கில் செல்கிறவனைப் பார்த்து நமக்குக் கார் இருக்கிறது. அவனுக்கு அது கூட இல்லையே என்று திருப்தியடையலாம். பைக்கில் செல்கிறவன் சைக்கிளில் செல்கிறவனையும், சைக்கிளில் செல்கிறவன் நடந்து செல்கிறவனையும் பார்த்து அவனை விட நாம் பரவாயில்லை என்று நிம்மதி கொள்ளலாம்.

நடந்து செல்கிறவன் நாம் செருப்புப் போட்டிருக்கிறோம். அவனுக்குப் பாவம் செருப்புக் கூட இல்லையே என்றும், வேறு எந்தச் சிரமமும் இல்லாமல் நடக்க முடிகிறதே, அதுவே போதும் என்று எவன் ஒருவன் திருப்தி அடைகிறானோ அவன் வாழ்வில் நிம்மதி பெறுகிறான்.

எனவே மனித வாழ்வின் லட்சியமே தானும் நிம்மதியாக இருந்து, மற்றவரையும் நிம்மதியாக வாழ வைப்பதுதான். அதனால்தான் நிம்மதி என்ற சொல்லில் மதி இருக்கிறது. மதி மற்றவரை. மதியைப் பயன்படுத்தி மகிழ்ச்சியும் நிம்மதியும் பெறுவோம்.

 - கவிஞர் அரு.நாகப்பன்

Next Story