விண்ணை வென்ற மனிதன்


விண்ணை வென்ற மனிதன்
x
தினத்தந்தி 19 July 2018 5:29 AM GMT (Updated: 19 July 2018 5:29 AM GMT)

நாளை (ஜூலை 20-ந் தேதி) நிலவில் மனிதன் கால் பதித்த தினம். மனிதன் விண்ணை வென்ற நிகழ்வாக இந்நாள் அமைந்தது.

வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் ரஷியா விண்வெளி ஆராய்ச்சியில் விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது, விண்கலனில் பூமியை வலம் வருவது என ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்ல என்கிற வகையில் போட்டியிட்டு சாதனைகள் புரிந்துவந்தனர்.

1961-ம் ஆண்டு சோவியத் நாட்டை சார்ந்த யூரி கெகாரின் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்றார். உலகமே வியந்தது. அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்றே வாரத்தில் ஆலன் ஷப்பெர்ட் என்பவரை விண்வெளிக்கு அனுப்பி தங்கள் ஆற்றாமையைத் தீர்த்துக் கொண்டது அமெரிக்கா.

அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1962-ம் ஆண்டில் உலகமே வியக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். ‘பத்தாண்டிற்குள் நாங்கள் நிலவுக்கு செல்ல முடிவு செய்துள்ளோம்’ என்றார். இதற்கு அப்பல்லோ திட்டம் என்று பெயரிடப்பட்டது.

நிலாவை காட்டி குழந்தைகளுக்கு சோறு ஊட்டிய பெற்றோருக்கும், நிலாவில் பாட்டி வடை சுடும் கதை கேட்டவர்களுக்கும், இது வியப்பாக இருந்தது. நிலாவில் மனிதனால் கால்பதிக்க முடியுமா? என்று அவர்கள் தங்களுக்குள்ளே கேள்விக் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், ஏழே ஆண்டுகளில், நாசா விண்வெளி நிலையம் மனிதனை முதன் முதலில் நிலாவில் கால் பதிக்க வைத்தது உலகத்தையே அதிசயிக்க வைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதை காண்பதற்கு கொடுத்து வைக்காமல், அதற்கு முன்பே அதிபர் கென்னடி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

முன்னதாக ஜான்கென்னடியின் அறிவிப்பை தொடர்ந்து, அமெரிக்க விண்வெளிக் கழகம் மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டத்துக்கு செயல் வடிவம்தரத் தொடங்கியது. முதல் இரண்டு ஆண்டுகள், நிலாவில் இறங்குவதற்கு சரியான இடம், குறிப்பாக பள்ளம், மேடுகளற்ற சமதளம், போதுமான சூரிய ஒளி என்று பல காரணிகளைக் கொண்டு தேடினர்.

1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி அப்பல்லோ-11 புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து காலை 9.32 மணிக்கு நீல்ஆம்ஸ்ட்ராங், எட்வின் பஸ் ஆல்ட்ரின், மைகேல் காலின்ஸ் ஆகியோருடன் விண்கலம் வெற்றிகரமாகக் கிளம்பியது. பன்னிரெண்டு நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையை அடைந்துவிட்டது.

பிறகு, பயணம் மேலும் தொடர்ந்து ஜூலை 20-ந்தேதி சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்தனர். ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின் இருவரும் கொலம்பியா விண்கப்பலில் இருந்து பிரிந்து ‘கழுகு’ என்கிற விண்கலத்தின் மூலம் நிலவினை நோக்கி சென்றனர் (அவர்கள் திரும்பி வரும்வரை கொலம்பியா விண்கப்பல் மைகேல் காலின்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது).

நிலவினை நோக்கி செல்லும் இந்த இறுதிக்கட்டப் பயணம் இருப்பதிலேயே மிகச் சிரமம் கொண்டதாகவும், ஆபத்து நிறைந்ததாகவும் அமைந்தது. விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள், எரிபொருள் பற்றாக்குறையென ஒவ்வொரு நொடியும் ஆபத்து நிறைந்திருந்தது. நிலவை நோக்கிய அந்த கடைசிக் கட்ட பயணத்தின்போது நீல் ஆம்ஸ்ட்ராங் விண்கலத்தை சாதுரியமாக செலுத்தினார்.

சரியாக மாலை 4:18 மணிக்கு (அமெரிக்க நேரம்), ‘கழுகு நிலவின் தரையை தொட்டுவிட்டது’ என்கிற செய்தி கிடைத்தபோது, நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டானது. ஏற்கனவே திட்டமிட்டபடி, முதல் மனிதராக, நீல்ஆம்ஸ்ட்ராங் நிலவில் அமெரிக்க நேரப்படி இரவு 10.56-க்கு தனது இடது காலினை பதித்தார்.

கால் வைக்கும்போது, ‘இந்த சிறு காலடி மனித இனத்தின் பிரமாண்டமான பாய்ச்சல்’ என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து ஆல்ட்ரின் நிலவில் அடியெடுத்து வைத்தார்.

அமெரிக்க நாட்டு கொடி நாட்டப்பட்டது. தாங்கள் பூமியிலிருந்து வந்துள்ளதாகவும், ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கு அமைதி விழைவதாக எழுதப்பட்ட பதாகையை நிலவில் வைத்தனர்.

நள்ளிரவு 11.47 மணிக்கு அமெரிக்க அதிபர் நிக்சன் இவர்களோடு தொலைபேசியில் உரையாடினார். சுமார் இரண்டரை மணி நேரம் நிலவில் சுற்றி, ஏராளமான கற்களை ஆராய்ச்சிக்காக சேகரித்தனர். புகைப்படங்கள் எடுத்தனர். பூமியைவிட புவி ஈர்ப்பு சக்தி ஆறில் ஒரு பகுதி உள்ளதால், உடல் எடை ஆறில் ஒரு பங்காக இருக்கும்.

பிறகு மீண்டும் கழுகு கலத்திற்கு திரும்பினர். ராக்கெட் உதவியுடன் நிலவின் ஈர்ப்பு சக்தியை எதிர்கொண்டு மேலெழும்பி வானில் உலவும் கொலம்பியாவில் மாலை 5.30 மணிவாக்கில் இணைந்தனர். தங்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இப்பூவுலகை நோக்கி மீண்டும் பயணிக்கத் தொடங்கினர்.

நான்கு நாட்கள் கழித்து, ஜூலை 24-ந்தேதி பிற்பகல் 12.50 மணிக்கு பசிபிக் பெருங்கடலில் அவர்கள் கலம் பத்திரமாக விழுந்தது. பிறகு, அவர்கள் யு.எஸ்.எஸ். ஹார்னெட் என்கிற கப்பலில் ஏற்றப்பட்டு ஹூஸ்டன் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாரும் நெருங்க முடியாத தனி இடத்தில் 21 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டனர்.

ஒருவேளை ஏதேனும் புதிய கொடிய நுண்ணுயிரிகள் அவர்களிடம் ஒட்டியிருந்தால் அதனை அழிப்பதற்காக இச்செயல்பாடு. பின்னர், நியூயார்க் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் நிக்ஸன் முன்னிலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இவ்விருவரைத் தொடர்ந்து, மேலும் பத்து பேர் நிலவில் கால் பதித்துள்ளனர். டிசம்பர் 1968-ல் இருந்து டிசம்பர் 1972 வரை ஒன்பது முறை அப்பல்லோ மிஷன் நாசவில் இருந்து நிலாவுக்கு விண்கலம் அனுப்பியது. 2012-ல் நாசா அனுப்பிய விண்கலமொன்று 1969-ல் சென்றவர்களின் காலடித்தடங்கள், பொருட்கள் போன்றவற்றை புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது.

நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னதுப் போல சிறு காலடி, ஆனால், அதன்பின் ஐம்பது ஆண்டுகளில் மனிதக் குலம் விஞ்ஞானத்தில் பிரமாண்டமான வளர்ச்சி பெற்று விட்டது என்றால் மிகையாகாது.

- எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன்

Next Story