ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ புழுங்கல் அரிசி வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை


ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ புழுங்கல் அரிசி வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 5:48 PM GMT)

குமரி மாவட்ட ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும், புழுங்கல் அரிசியாக வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) பிரித்திக் தயாள், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, துணை கலெக்டர் (பயிற்சி) சாய்வர்தினி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வேதஅருள் சேகர், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சுசீலா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக் மேக்ரின், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) குணபாலன், மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:–


குளங்களில் உள்ள வண்டல் மண்ணை எடுப்பதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. எனவே சிரமமின்றி மண் எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அருவிக்கரை கால்வாயில் கழிவுநீர் கலக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். (அப்போது சம்பந்தப்பட்ட விவசாயி கழிவுநீர் கலப்பதை வீடியோ ஆதாரத்தையும் காண்பித்தார்). குமரி மாவட்டத்தில் 25 ஆயிரம் எக்டரில் 42 லட்சம் தென்னை மரங்கள் உள்ளது. வேர்வாடல் நோயால் ஏராளமான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்ய விஞ்ஞானிகளை அழைக்க வேண்டும். தென்னை மரங்களில் ஏற்படும் நோய் குறித்தும் ஆய்வு செய்ய தென்னை ஆராய்ச்சி நிலையம் ஒன்றை குமரி மாவட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் காடுகள் சட்டத்தில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். சுதந்திர தினவிழாவுக்கு விவசாய பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும். ஆத்மா திட்டத்தில் விவசாயிகளை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதுதொடர்பான பயனாளிகள் தேர்வில் குளறுபடிகள் உள்ளன. இந்த ஆண்டு விவசாயிகளிடம் மனு பெற்று தேர்வு செய்யப்பட வேண்டும். விவசாய சுற்றுலாவுக்கு விவசாயிகளை அழைத்துச் செல்வதில் பயன் இல்லை. அந்த பணத்தை தடுப்பணைகள் கட்ட செலவு செய்யலாம்.


குமரி மாவட்ட நெற்பயிரில் பொதுவாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும். தனிநபர் ரே‌ஷன் கார்டுகளை ரத்து செய்து வருகிறார்கள். இது மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும். மேலும் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும் புழுங்கல் அரிசியாக வழங்க வேண்டும்.

அரசு ரப்பர் கழகம் நட்டுள்ள ரப்பர் பயிரின் ஊடுபயிராக அன்னாசி, வாழை பயிரிட விவசாயிகளுக்கு ஏலம் விட்டுள்ளது. அவ்வாறு விளைவிக்கப்பட்ட அன்னாசிப்பழங்களை வெளியே எடுத்துச்செல்ல அரசு ரப்பர் கழகம் மறுத்து வருகிறது. இதனால் அன்னாசி பழங்கள் அழுகும் நிலையில் இருந்து வருகிறது. எனவே அவற்றை வெளியே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சிப்பாறையில் இருந்து வண்டல் மண் எடுக்க மாவட்ட அரசிதழில் வெளியிட்டு, விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெற்ற பிறகும் காலதாமதம் ஆவது ஏன்?.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினர்.

இதற்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பதில் அளித்து பேசியதாவது:–


குளங்களில் வண்டல் மண் எடுக்க தாசில்தாரிடம் அனுமதி கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆத்மா திட்டத்தில் விவசாயிகளை சுற்றுலா அழைத்துச் செல்வதில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்குரிய பணத்தை பிற விவசாய திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது. தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக பட்டியல் கொடுத்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் காடுகள் சட்ட திருத்தம் கடந்த 9–ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே தனியார் காடுகள் பிரச்சினை தொடர்பாக கொடுத்துள்ள மனுக்களுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிநபர் ரே‌ஷன் கார்டுகள் தொடர்பான புகார்கள் வந்துள்ளன. ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ரே‌ஷன் கார்டுகள் இருப்பது தெரிய வந்தால் மட்டுமே அவை ரத்து செய்யப்படுகிறது. அதுபற்றியும் கிராமங்களில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ அரிசியும் புழுங்கல் அரிசியாக வழங்க அதிகாரிகளிடம் பேசியுள்ளேன். தற்போது இருப்பில் உள்ள அரிசி காலியான பிறகு மாவட்டத்தில் உள்ள ரே‌ஷன் கடைகளில் புழுங்கல் அரிசி முழுமையாக வழங்கப்படும். பேச்சிப்பாறை அணையில் வண்டல் மண் எடுப்பது தொடர்பான கோப்பு வனத்துறையிடம் நிலுவையில் உள்ளது. அந்த கோப்பு வந்ததும் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.


கூட்டத்தில் விவசாயி ஒருவர் பேசும்போது, அதிகாரி ஒருவரை பணிமாறுதல் ஆகி செல்லுமாறு கூறியதால் கூட்டத்தில் இருந்த அதிகாரி அரங்கை விட்டு வெளியேற முயன்றார். பின்னர் கலெக்டர், அவரை சமாதானப்படுத்தி அமர வைத்தார். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் புலவர் செல்லப்பா, மருங்கூர் செல்லப்பா, செண்பகசேகரபிள்ளை, விஜி, தாணுபிள்ளை, ராஜாமணி, பத்மதாஸ் உள்ளிட்ட விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story