பாளையங்கோட்டையில் தீ விபத்து ஏற்பட்ட தனியார் பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு
பாளையங்கோட்டையில் தீ விபத்து ஏற்பட்ட தனியார் பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினார்கள்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் தீ விபத்து ஏற்பட்ட தனியார் பள்ளிக்கூடத்தில் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினார்கள்.
பள்ளிக்கூடத்தில் தீ விபத்து
நெல்லை பாளையங்கோட்டை எல்.ஐ.சி. ரோட்டில் ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது.
இந்த பள்ளிக்கூடத்தின் 2-வது மாடியில் பழைய ஆவணங்கள், புத்தகங்கள் இருந்த ஒரு அறையில் நேற்று முன்தினம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் உள்ள 5-ம் வகுப்பு அறைக்கும் பரவியது. இதை பார்த்த ஆசிரியைகள் உடனடியாக மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக அங்கு இருந்து வெளியேற்றினார்கள். இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து தலைமை ஆசிரியை ஜாய் பெஞ்சமின் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பழைய ஆவணங்கள் இருந்த அறையில் மின்கசிவு ஏற்பட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் போர்டுகளில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
புத்தக பைகள் சேகரிப்பு
இந்த நிலையில் நேற்று பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அந்த பள்ளிக்கூடத்தில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளிநபர்கள் யாரும் பள்ளிக்கூட வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
இதற்கிடையே மற்ற வகுப்பறைகளில் மாணவர்கள் விட்டுச்சென்ற புத்தக பைகளை நேற்று ஆசிரியர்கள் சேகரித்தனர். அவர்கள் ஒவ்வொரு வகுப்பு வாரியாக அந்த பைகளை அருகில் உள்ள அந்த பள்ளிக்கூட நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மற்றொரு பள்ளிக்கூடத்துக்கு லோடு ஆட்டோ மூலம் எடுத்துச் சென்றனர். நேற்று அங்கு வந்த ஒருசில பெற்றோரிடம் மட்டும் புத்தக பைகளை கொடுத்து அனுப்பினர். மற்றவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) புத்தக பைகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கூட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
அதிகாரிகள் குழு ஆய்வு
இந்த நிலையில் கலெக்டர் ஷில்பா உத்தரவுபடி நேற்று அதிகாரிகள் குழுவினர் பள்ளிக்கூடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன் தலைமையில் பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள், தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். அங்கு தீப்பற்றிய இடம் மற்றும் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்தும் அங்குள்ள வசதிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் கூறுகையில், “தீ விபத்து நடந்த பள்ளிக்கூட கட்டிடத்தில் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் அறிக்கை மாவட்ட கலெக்டருக்கு தாக்கல் செய்யப்படும். அதன் பிறகு அந்த கட்டிடத்தில் வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிப்பது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்றனர்.
Related Tags :
Next Story