பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதல்; பெண் பலி
பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பென்ணாடம்,
பெண்ணாடம் அருகே உள்ள ஓ.கீரனூரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பராசக்தி(வயது 36). வேலு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பராசக்தி தனது சொந்த வேலை காரணமாக பெண்ணாடம் வந்திருந்தார். பின்னர் அங்கு வேலையை முடித்துவிட்டு, ஊருக்கு செல்வதற்காக பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தை சேர்ந்த மணிமாறன்(47) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து தான் எனது மாமனாரை பார்க்க ஓ.கீரனூர் செல்கிறேன். எனவே நீங்களும் வந்தால் உங்களை வீட்டில் இறக்கி விடுகிறேன் என்று கூறி, அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஓ.கீரனூர் நோக்கி புறப்பட்டார்.
விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் மாளிகைகோட்டம் என்ற இடத்தில் சென்ற போது பெண்ணாடத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த டிராக்டர் ஒன்று மணிமாறன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பராசக்தியின் உடல் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது.
பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பராசக்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மணிமாறன் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story