திருப்பூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி அளவிலான பொருட்கள் தேக்கமடையும் லாரி உரிமையாளர்கள் தகவல்


திருப்பூர் மாவட்டத்தில் ரூ.100 கோடி அளவிலான பொருட்கள் தேக்கமடையும் லாரி உரிமையாளர்கள் தகவல்
x
தினத்தந்தி 20 July 2018 4:00 AM IST (Updated: 20 July 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு திருப்பூர் மாவட்டம் முழுவதும் ரூ.100 கோடி அளவிலான பொருட்கள் தேக்கமடையும் நிலை உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்,

நாடு முழுவதும் டீசல் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். 3-ம் நபர் காப்பீடு உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தொடர்ந்து உயர்ந்து வரும் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். உரிமம் முடிந்த பின்னர் செயல்படும் சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். டீசல் மீதான வாட் வரியை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடு முழுவதும் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.100 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்படும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு இதுவரை அழைக்கவில்லை. இதனாலேயே இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 90 லட்சம் லாரிகளும், 60 லட்சம் வேன்களும் உள்ளிட்ட வாகனங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. சுங்கச்சாவடிகளை உடனடியாக மூட வேண்டும். அனைத்து தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தரகோரிக்கை விடுத்துள்ளோம். இதன்படி பொதுமக்கள் அனைவரும் வருகிற 22-ந்தேதி அன்று ஒருநாள் தங்கள் வாகனங்களை இயக்காமல் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அனைத்து தரப்பினரும் பெட்ரோல், டீசலை பயன்படுத்துகின்றனர். திருப்பூர் மாவட்டம் முழுவதும் 8 ஆயிரம் லாரிகள், 8 ஆயிரம் வேன்கள் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன.

இந்த வேலை நிறுத்தத்தால் காங்கேயத்தில் கொப்பரை, திருப்பூரில் பனியன் பொருட் கள், அனுப்பர்பாளையத்தில் பாத்திரங்கள், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கோழிக் கான உணவு வகைகள், கோழி உள்ளிட்டவைகளும் தேங்க வாய்ப்பு உள்ளது. மேலும், திருப்பூரில் இருந்து தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்படும். அனைத்து புக்கிங் சங்கத்தினரும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரையுள்ள பொருட்கள் தேக்கம் அடைய வாய்ப்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story