நாகையில் தொழில் அதிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை


நாகையில் தொழில் அதிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 July 2018 4:45 AM IST (Updated: 20 July 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் தொழில் அதிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்,

நாகை யாஹூசன் பள்ளி தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர்(வயது 63). தொழிலதிபர். இவருடைய வீட்டுக்கு எதிரே அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஷேக் அப்துல்காதர் வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டு இருந்தார்.

நள்ளிரவில் மர்ம நபர்கள் ஷேக் அப்துல்காதர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசினர். இந்த குண்டு அவரது வீட்டின் மீது விழுந்தது. ஆனால் அது வெடிக்கவில்லை. இந்த சத்தம் கேட்டு ஷேக் அப்துல்காதர் வெளியே வந்து பார்த்த போது வெளியில் யாரும் இல்லை.

இதுகுறித்து நாகை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஷேக் அப்துல்காதர் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். இதுகுறித்து ஷேக் அப்துல்காதர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், ஷேக் அப்துல்லா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார்? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் தொழில் அதிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story