கூடலூரில் 15 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்
கூடலூரில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தி விற்பனைக்காக வைத்திருந்த 15 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்தனர்
கூடலூர்,
கேரளாவில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பார்மாலின் கலந்த மீன்களை கடந்த மாதம் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியிலும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று முன்தினம் இரவு கூடலுார் பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினர்.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கருணாநிதி தலைமையில் அலுவலர்கள் செந்தில்குமார், கோவிந்தராஜ் உள்ளிட்ட துறையினர் ஓட்டல்கள், பேக்கரி, மளிகை கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பேக்கரி கடைகளில் பெயர், முகவரி, பாக்கெட் செய்த தேதி உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் சில பேக்கரி, மளிகை மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறாமல் இயங்கி வந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து 1 வாரம் கால அவகாசம் தருவதாகவும், அதற்குள் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி உரிமம் பெற வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் உரிமம் பெறாமல் வணிகம் செய்தால் உடனடியாக கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து நடைபாதை கடைகளில் விற்கப்பட்ட உணவு பொருட்களையும் தணிக்கை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக காலை 7 மணிக்கு இறைச்சி, மீன்கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் கூடலுார் நகரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பார்மாலின் ரசாயனம் எதுவும் மீன்களில் கலக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் பரிசோதித்தனர். ஆனால் ரசாயனம் எதுவும் கலக்கப்படப்பட வில்லை என தெரிய வந்தது. இருப்பினும் அழுகிய நிலையில் பொதுமக்களுக்கு விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுமார் 15 கிலோ அழுகிய மீன்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை பயன்படுத்த முடியாதபடி ரசாயனத்தை ஊற்றி அழித்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கருணாநிதி கூறியதாவது:-
உணவு பொருட்களில் சாயம் கலந்து விற்பனை செய்யக்கூடாது. சாயம் கலந்த உணவை சாப்பிடுவதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் உருவாகிறது. எனவே பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உணவில் கலப்படம் செய்து விற்பனை செய்வது உணவு பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பந்தலுார் பகுதியில் உள்ள ஓட்டல்கள், மளிகை என அனைத்து வணிக நிறுவனங்களிலும் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
Related Tags :
Next Story