தாம்பரம் மார்க்கெட் பகுதியில் கடைகளுக்கு வாடகையை உயர்த்தியதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு நகராட்சி அலுவலகம் முற்றுகை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளுக்கு வாடகையை உயர்த்தி உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதை குறைக்க வலியுறுத்தியும் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் மார்க்கெட் பகுதியில், தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் ஒரு கடைக்கு வருடத்துக்கு ரூ.3,500 வாடகையாக வாங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வாடகையை ரூ.46 ஆயிரத்து 300 என உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கடைகளை அடைத்து விட்டு தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும் வியாபாரிகளுக்கு ஆதரவாக அவர்களுடன் வந்தார்.
பின்னர் உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்கவும், வாடகை பாக்கியை செலுத்தவும் கால அவகாசம் கேட்டு நகராட்சி கமிஷனரிடம் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக தாம்பரம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
ரூ.1½ கோடி வாடகை பாக்கி
தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மனைகளில் கடைகள் கட்டி உள்ளவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை ஏற்றுவது வழக்கம். 1 வருடத்துக்கு கடைக்காரர்கள் ரூ.3,500 மட்டுமே நகராட்சிக்கு செலுத்தி வந்தனர்.
இந்த வாடகையை ஏற்ற வேண்டும் என அரசாணை எண் 92-ன்படி பொதுப்பணித்துறை அளித்துள்ள விலை விகிதத்தில் வாடகை உயர்த்தப்பட்டது. இந்த வாடகை பாக்கி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.1½ கோடியாக உள்ளது. இந்த வாடகை பாக்கி தொகையை கட்டச்சொல்லி நகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் வியாபாரிகளை கடை கடையாக சென்று நேரில் சந்தித்து கேட்டனர். பாக்கி தொகை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது.
ஆலோசித்து முடிவு
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் பாக்கி தொகையை வியாபாரிகள் செலுத்த மறுப்பதால் அந்த கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் ‘சீல்’ வைக்க நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் வியாபாரிகள் கடைகளை மூடிவிட்டு நகராட்சிக்கு வந்து விட்டனர்.
வாடகை பாக்கியை செலுத்த கால அவகாசம் கேட்டு உள்ளனர். அரசாணை மற்றும் பொதுப்பணித்துறை அளித்துள்ள விலை விகிதத்தில் வாடகை ஏற்றப்பட்டு உள்ளது. தாம்பரம் மார்க்கெட் பகுதியில் தனியார் இடங்களில் லட்சக்கணக்கில் வாடகை வசூல் செய்கின்ற நிலையில் மிக நியாயமான முறையில்தான் வாடகை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனினும் வியாபாரிகள் பிரச்சினை தொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story