பேரணாம்பட்டில் காதலியை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த இஸ்ரோ ஊழியர் கைது


பேரணாம்பட்டில் காதலியை கர்ப்பிணியாக்கி திருமணத்திற்கு மறுத்த இஸ்ரோ ஊழியர் கைது
x
தினத்தந்தி 20 July 2018 4:00 AM IST (Updated: 20 July 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டில் காதலியை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்த இஸ்ரோ ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பேரணாம்பட்டு,

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பாகர்உசேன் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் முத்தமிழன் (வயது 29). திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் பேரணாம்பட்டை சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

அது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதில் இளம்பெண் கர்ப்பிணியானார். உடனே தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு முத்தமிழனிடம், இளம்பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர் பெற்றோரிடம் பேசி திருமணம் செய்துகொள்வதாக கூறியிருக்கிறார்.


இந்த நிலையில் 3 மாத கர்ப்பிணியான இளம்பெண் மீண்டும் திருமணத்திற்கு வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு கருவை கலைத்துவிட்டு வா, திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் இளம்பெண் கருவை கலைக்க மறுத்துவிட்டார். இதனால் திருமணம் செய்யமுடியாது என்று முத்தமிழன் கூறிவிட்டார்.

அதைத்தொடர்ந்து இளம்பெண்ணின் பெற்றோர், முத்தமிழனின் வீட்டுக்கு சென்று திருமணம் குறித்து பேசி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த முத்தமிழன் இளம்பெண்ணையும், அவருடைய பெற்றோரையும் கொலைசெய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.


இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முத்தமிழனை நேற்று கைது செய்தனர்.

Next Story