சைவமும், வைணவமும் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு தகவல்களை தந்துள்ளது


சைவமும், வைணவமும் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு தகவல்களை தந்துள்ளது
x
தினத்தந்தி 19 July 2018 10:30 PM GMT (Updated: 19 July 2018 9:22 PM GMT)

சைவமும், வைணவமும் தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு தகவல்களை தந்துள்ளது என்று தஞ்சை தமிழ்ப்பல் கலைக்கழக துணை வேந்தர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழக தொலைநிலைக்கல்வி இயக்ககம் மற்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவில் ஆழ்வார்கள்-ஆச்சார்யர்கள் ஆய்வு மையம் ஆகியவை சார்பில் வைணவ பாடப்பிரிவுகள் தொடக்க விழா தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு துணைவேந்தர் பாஸ்கரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசிய தாவது:-

கோவில் என்பது வழிபாட்டு தலம், சமயத்தின் அடையாளம் மட்டும் இல்லை. அது தமிழர்களின் பண்பாட்டு மையமும் ஆகும். கோவில்கள் வழிபாட்டு தலமாகவும், வங்கிகளாகவும், பாடசாலையாகவும் செயல்பட்டது. இன்னும் செயல் படுகிறது. கல்விப்பணியோடு சமயத்தையும் இணைத்து செய்தது.

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு விட்டு வந்து விடாமல் இறைவன் போதிக்கும் தத்துவங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். அங்குள்ள திருத்தல வரலாறு என்று எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிந்து கொண்டு வருவது தான் முழுமையான வழிபாடு. இந்திய பண்பாட்டில் சைவமும், வைணவமும் நமது தமிழ் இலக்கியத்திற்கு பல தகவல்களை தந்துள்ளது. சைவம், வைணவம் ஆகியவற்றின் தத்துவங்கள் பல அரிய பொக்கிஷங்கள் ஆகும். சைவமும், வைணவமும் தமிழர் களின் இரண்டு கண்கள்.

இதில் சான்றிதழ் படிப்பில் வைணவம், ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் வாழ்வும் பணியும், வைணவ ஆலயங்களில் கல்வெட்டுகள், வேதங்கள் மற்றும் அதன் வேதாந்தங்கள் ஆகிய 4 தலைப்புகளிலும, பட்டய படிப்பில் தமிழ் இலக்கியங்களில் வைணவக் கூறுகள், வைணவ உரைவளம், இலக்கிய நோக்கில் திவ்ய பிரபந்தம், ஒப்பிலக்கணம், ராமானுஜம் ஆகிய 5 தலைப்புகளிலும் நடத்தப் படுகின்றன.

இளங்கலையில் வைணவம் என்ற தலைப்பிலும், முதுகலைப்படிப்பில் வைணவம், பாஷ்யம் என்ற இரு தலைப்புகளிலும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதசுவாமி கோவிலின் யாத்திரி நிவாஸ் வளாகத்தில் நடத்தப்பட உள்ளன. பாஷ்யம் என்ற வடமொழி நூல் முதன் முதலில் தமிழ் மொழியில் சான்றிதழ், பட்டயம், இளங்கலை, முதுகலையாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகின்றன. அனைத்து படிப்புகளிலும் மொத்தம் 400 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார். விழாவில் தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர் முத்துக்குமரன், ரெங்கநாதசாமி கோவில் சுந்தர் பட்டர், அறங்காவலர்கள் ரெங்காச்சாரி, கவிதா மற்றும் பலர் பேசினர். முன்னதாக தொலைநிலைக்கல்வி இயக்கக இணை இயக்குநர் இளையாப்பிள்ளை வரவேற்றார். முடிவில் மெய்யியல் துறைத் தலைவர் பாலச்சந்திரன் நன்றி கூறினார். 

Next Story