போலீசார் பிடிக்க முயன்ற போது மலையில் இருந்து குதித்த கொள்ளையன் கால் முறிந்தது


போலீசார் பிடிக்க முயன்ற போது மலையில் இருந்து குதித்த கொள்ளையன் கால் முறிந்தது
x
தினத்தந்தி 19 July 2018 10:00 PM GMT (Updated: 19 July 2018 9:28 PM GMT)

சேலத்தில், போலீசார் பிடிக்க முயன்றபோது மலையில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்ட கொள்ளையனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் சாந்தி வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தாதகாப்பட்டியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்ற போது, பின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் திடீரென சாந்தி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்தனர். இதையடுத்து அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக சாந்தி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெரும்பாறைகாடு பகுதியை சேர்ந்த கொள்ளையன் ரப்பர் பிரகாஷ் என்கிற ஜெயபிரகாஷ் மற்றும் அவருடைய நண்பர் தாதகாப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (20) ஆகியோர் சேர்ந்து சாந்தியிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

ஜெயபிரகாஷ் சன்னியாசிகுண்டு மலைகரட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அவரை பிடிக்க சென்றனர். போலீசாரை கண்டதும் ஜெயபிரகாஷ் தப்பி ஓட முயன்றார். அப்போது அவர் மலைகரட்டில் இருந்து கீழே குதித்தார். இதில் ஜெயபிரகாசுக்கு காலில் முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். ஜெயபிரகாஷ் மீது அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அண்ணா பூங்கா அருகே உள்ள பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து பணம் திருடிய வழக்கு, அம்மாபேட்டையில் உள்ள ஒரு கோவிலில் பூட்டை உடைத்த வழக்குகளில் ஜெயபிரகாஷ் தொடர்புடையவர் என போலீசார் தெரிவித்தனர். இதேபோல் மணிகண்டன் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story