அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க். பட்டப்படிப்பில் சேர மீண்டும் தகுதித்தேர்வு


அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க். பட்டப்படிப்பில் சேர மீண்டும் தகுதித்தேர்வு
x
தினத்தந்தி 20 July 2018 4:00 AM IST (Updated: 20 July 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் பட்டப்படிப்பில் சேர மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சேலம்,

கோவை அண்ணா பல்கலைக்கழக சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சங்க தலைவர் கே.பரமசிவம், செயலாளர் ஏ.கே.நடேசன், பொருளாளர் பா.மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாடு முழுவதும் உள்ள ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு நாட்டா எனப்படும் தகுதித்தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பி.ஆர்க். 5 ஆண்டு பட்டப்படிப்பில் சேருவதற்கு தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை தவறவிட்டவர்களும், தேர்ச்சி பெறாதவர்களும் கலந்தாய்வுக்கு பின்னர் காலியாக உள்ள பி.ஆர்க். இடங்களை நிரப்புவதற்காகவும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாடு நாட்டா எனப்படும் தகுதித்தேர்வை மீண்டும் நடத்த இருக்கிறது.

இந்த தேர்வு எழுத இணைய தளம் வாயிலாகவும், அருகில் உள்ள ஆர்க்கிடெக்சர் கல்லூரிகள் உதவியுடனும் விண்ணப்பிக்கலாம். இதற்காக விண்ணப்பிக்கும் தேதி குறித்த அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் வெளியிடும். இந்த தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பிளஸ்-2 மதிப்பெண்கள் மற்றும் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேரலாம்.

மேலும் ஏற்கனவே நாட்டா தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில் 40 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் நாட்டா தேர்வு கிராமப்புற மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், தேர்ச்சி வாய்ப்பை தவற விட்ட மாணவர்களுக்கும் சேர்த்து மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் வகையில், கோவை அண்ணா பல்கலைக்கழக சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் முறையிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலம் மீண்டும் தேர்வு நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பி.ஆர்க். எனப்படும் ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் தற்போது நடைபெற உள்ள தமிழ்நாடு நாட்டா தகுதித்தேர்வு முடிவில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு கோவை அண்ணா பல்கலைக்கழக இணைவு பெற்ற சுயநிதி பொறியியல் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள் தங்களது கல்லூரிகளில் முன்னுரிமையுடன் மாணவ-மாணவிகளை சேர்த்துக்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story