நாமக்கல்லில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2018 10:45 PM GMT (Updated: 19 July 2018 9:51 PM GMT)

நாமக்கல்லில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு கல்லூரி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

பல்கலைக்கழக மானியக்குழுவின் 7-வது ஊதிய திருத்தத்தை அனைத்து மாநிலங்களும் சீராக ஒரே காலத்தில் அமல்படுத்த ஏதுவாக, மத்திய அரசு 100 சதவீத நிதியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரியில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். இதில் அனைத்து மாநிலங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழுவின் 7-வது ஊதிய திருத்தத்தினை அமல்படுத்த கோரி நினைவூட்டு கடிதம் பல்கலைக்கழக மானியக்குழுவின் மூலம் அனுப்பப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களும் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

தற்காலிக ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி நிதி ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம், பணிநிலை ஆணை வழங்கப்பட வேண்டும்.

உடற்கல்வி இயக்குனர், நூலகர் மற்றும் பயிற்றுனர்களுக்கு, ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய ஆணை வழங்கப்பட வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்றுவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். உயர்கல்விக்கான நிதி குறைப்பு, பல்கலைக்கழகம் மற்றும் அரசு நிறுவனங்களை தன்னாட்சி மயமாக்குவது நிறுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி பேராசிரியைகள் கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் லத்துவாடியில் உள்ள நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு கல்லூரி ஆசிரியர் கழக சேலம் மண்டல தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். 

Next Story