சமுதாயக்கூடத்தை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்
உப்புக்கோட்டையில் சமுதாயக்கூடத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உப்புக்கோட்டை,
உப்புக்கோட்டை வடக்கு தெருவில் உள்ள ஒரு சமுதாய மக்களுக்கான சமுதாயக்கூடம் மற்றும் அதன் அருகில் உள்ள காலியிடங்கள் தனக்கு சொந்தமானது என்று உப்புக்கோட்டை அருகே உள்ள சிங்காரக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தற்போது அவர் உயிருடன் இல்லை. இவருக்கு வீரம்மாள் (70) இருளாயம்மாள் (68) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கோர்ட்டில் சமுதாயக்கூடம் அமைந்துள்ள இடம் காளிமுத்துக்கு சொந்தம் என்று தீர்ப்பு வந்தது.
இதைத்தொடர்ந்து சமுதாயக்கூடத்தை அகற்ற கோர்ட்டு பணியாளர்கள் போலீசாருடன் நேற்று காலை உப்புக்கோட்டைக்கு வந்தனர். இதனை அறிந்த வடக்கு தெரு பகுதி மக்கள் சமுதாயக் கூடத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் சமுதாயக்கூடத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த சமுதாயக் கூடத்தில் தான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். மேலும் சமுதாயக்கூடத்தின் முன்பாக உள்ள இடத்தில் தான் ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் நடைபெறும் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறோம். எனவே சமுதாயக்கூடத்தை இடிக்க விடமாட்டோம் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து போடி தாசில்தார் ஆர்த்தி, தேனி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் ஆகியோர் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சமுதாயக்கூடம் இடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் உப்புக்கோட்டை பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story