வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 50 அடியாக உயர்ந்தது


வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 50 அடியாக உயர்ந்தது
x
தினத்தந்தி 20 July 2018 5:38 AM IST (Updated: 20 July 2018 5:38 AM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து அதிகரித்ததால் வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் 50 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி,


தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 50 அடியை எட்டியநிலையில், அணையில் இருந்து மதுரை மாவட்ட விவசாயிகளின் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன்காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் தேனி மாவட்டத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனையடுத்து கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த வைகை அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து தற்போது 50 அடியை எட்டியுள்ளது. அதாவது நேற்று முன்தினம் 49.41 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 50 அடி ஆனது. நீர்வரத்து வினாடிக்கு 1,748 கனஅடியில் இருந்து 1,864 கனஅடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 960 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்இருப்பு 1,992 மில்லியன் கன அடியாக இருந்தது. 

Next Story