வாழ்வியல் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் கலை


வாழ்வியல் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் கலை
x
தினத்தந்தி 20 July 2018 4:42 AM GMT (Updated: 20 July 2018 4:42 AM GMT)

இன்று (ஜூலை 20-ந்தேதி) உலக செஸ் விளையாட்டு தினம்.

சதுரங்கம் எனும் செஸ் விளையாட்டு உலகம் முழுக்க ஒரே முறையில் விளையாடப்படும் அறிவு சார்ந்த விளையாட்டு ஆகும். ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிலும் பின்னர் மங்கோலியா வழியாக உலகமெங்கும் பரவியது என்று வரலாறு கூறுகிறது. இந்தியாவில் இருந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் ரஷியா முழுவதும் பரவியது.

கார்போவ், காஸ்பரோவ் போன்ற ரஷிய வீரர்களும், பாபிபிஷர் போன்ற அமெரிக்க வீரர்களும் கோலோச்சிய விளையாட்டில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் நீண்ட நாட்களுக்கு உலக சாம்பியனாக வலம் வந்து நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இந்தியாவில் இவ்விளையாட்டு பிரபலமாக இவரும் ஒரு காரணம்.

இதன் சரியான விதிமுறைகள் இத்தாலியில் பதினாறாம் நூற்றாண்டில் உருவானது. சதுரங்கம் இருவர் மட்டும் விளையாடும் பலகை விளையாட்டு ஆகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள். ராஜா, ராணி, மந்திரி, குதிரை, கோட்டை, சிப்பாய்கள் என இருபக்கமும் 32 காய்கள் இருக்கும்.

கருப்பு, வெள்ளை என இரு நிறங்களே விளையாட்டில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. 8 வரிசைகளும், 8 நிரல்களும் ஆக 64 கட்டங்களை உடையது சதுரங்க பலகை. ஒவ்வொரு காய்களுக்கும் நகரும் விதிகள் உள்ளன. தலைமை ராஜாதான். அதிக அதிகாரம் படைத்தது ராணி மட்டுமே.

மற்ற அனைத்து காய்களுமே தற்காத்துக் கொள்ளவும் எதிரியை வீழ்த்தவும் போராடுகின்றன. நம் வாழ்க்கையில் போராடவும் கற்றுத் தருகின்றன. சதுரங்க விளையாட்டு வீரர்கள் குறைந்தது அடுத்த 10 நகர்த்தலுக்காகவாவது யோசித்து விளையாட வேண்டும்.

மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு அடிப்படை எனலாம். சதுரங்கம் விளையாட்டாக மட்டுமின்றி கலையாகவும், அறிவியலாகவும் பார்க்கப்படுகின்றது. இது போர் விளையாட்டாகவும், மூளை சார்ந்த போர்க் கலையாகவும் பார்க்கப்படுகின்றது.

மனித இனத்தின் ஆரம்ப கட்ட விளையாட்டுகளில் சதுரங்கமும் ஒன்று. இவ்விளையாட்டை தொடர்ந்து விளையாடும் சிறுவர் சிறுமியர்கள் மூளை நுட்பமாகவும், அவர்களின் படிப்புத்திறன் மேம்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். செஸ் விளையாடுவதன் மூலம் நம்முடைய மூளையின் நரம்புகள் தூண்டப்பட்டு செயல்திறன் மேம்படும்.

மூளையின் இரண்டு பக்கங்களும் சிறப்பாக செயல்பட பயிற்சி அளிக்கப்படுகிறது. மன நோய்களான அல்சைமர், மன அழுத்தம், பதற்றம் போன்றவை குணப்படுத்தப்படுகிறது. குழந்தைகளின் சிந்திக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், பிரச்சினைகளை கையாளும் வேகம், தன்னம்பிக்கை போன்றவை அதிகரிக்கின்றன. ஆழமாக சிந்தனையை ஒருமுகப்படுத்தும் தன்மை, மன அமைதி வளர்கிறது. செஸ் விளையாடுவதன் மூலம் ஆட்டிசம் போன்ற நோய்களும் குணமடைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சதுரங்கம் ஒரு விளையாட்டு மட்டுமல்ல, இது பகுத்தறிவுடன் கூடிய வாழ்வியல், சிந்தனைத்திறன் வளர்க்கும் அறிவியல்.

மனிதர்கள் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த இவ்விளையாட்டு, இப்போது ரோபோட் எனும் எந்திரங்களும் விளையாட தொடங்கி விட்டதை அறிவியலின் வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. ஓர் ஆறுதல் என்னவெனில் ரோபோக்களை மிஞ்சும் வீரர்கள் இருப்பதுதான். நமது மூளைக்கு வேலை கொடுப்பது மட்டுமல்லாமல் பொழுது போக்கிற்காகவும் இது உதவுகின்றது.

உலகில் சதுரங்கத்தில் முன்னணியில் உள்ள நாடு இந்தியா என்றால் மிகையில்லை. குறிப்பாக தன்னுடைய 13 வயதில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டம் வென்ற பிரகானந்தா, அரவிந்த் சிதம்பரம், கார்த்திகேயன் முரளி, வைஷாலி, மகாலட்சுமி, மோனிஷா போன்ற மாணவர்களின் வெற்றியை குறிப்பிடலாம்.

உயர்தட்டு மக்களின் விளையாட்டாக இருந்த சதுரங்க விளையாட்டு இப்போது வெகுஜன மக்களின் விளையாட்டாக மாறியிருப்பது அண்மைக் கால மகிழ்வான நிகழ்வாகும்.

1966-ல் யுனெஸ்கோவால் பரிந்துரைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20-ந்தேதி உலக சதுரங்க விளையாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது. உலகிலேயே ஒரு விளையாட்டிற்கு சிறப்பு தினம் கடைபிடிப்பது சதுரங்க விளையாட்டிற்குத்தான். ஒரு விளையாட்டாக மட்டுமல்லாமல் ஒரு கலையாகவும், வாழ்வியல் சிந்தனைத் திறனை மேம்படுத்தும் அறிவியலாகவும் விளங்குகின்றது. நாமும் விளையாடி, நம் பிள்ளைகளுக்கும் சதுரங்க விளையாட்டை அறிமுகப்படுத்துவோம். 

- இரா.தமிழ்ச்செல்வன், செஸ் ஆர்வலர்

Next Story