மாவட்டத்தில் 600 லாரிகள் வேலைநிறுத்தம் ரூ.10 கோடி வருமானம் இழப்பு


மாவட்டத்தில் 600 லாரிகள் வேலைநிறுத்தம் ரூ.10 கோடி வருமானம் இழப்பு
x
தினத்தந்தி 21 July 2018 3:45 AM IST (Updated: 20 July 2018 11:21 PM IST)
t-max-icont-min-icon

சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 600 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.10 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி,

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் பெற்றுக்கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதத்திற்கு ஒரு முறை நிர்ணயிப்பதோடு, ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான 3-ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்தது.

இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக முன்பதிவுகள் நிறுத்தப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் லாரிகளில் முன்பதிவுகள் நிறுத்தப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வட மாநிலங்களான டெல்லி, குஜராத்திற்கு தேங்காய்கள் அதிக அளவில் அனுப்பப்பட்டு வந்தன.

அதே போல ஓசூரில் இருந்து வட மாநிலங்களுக்கு வாகன உதிரிபாகங்கள் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வந்தன. மேலும் ஓசூரில் இருந்து காய்கறிகளும், மலர்களும் வெளி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் சென்று வந்தன. தற்போது லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக அவற்றை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலை வெறிச்சோடி காணப்பட்டது. அதே போல கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களே சென்று வந்தன. லாரிகள் செல்லாததால் சுங்கச்சாவடியும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சில லாரிகள் சுங்கச்சாவடி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 600 லாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளன. இதனால் ரூ.10 கோடி அளவிற்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லாரி உரிமையாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:-

பால் கொள்முதல் செய்யும் வழித்தடங்களில் காவல் துறையினர் மூலம் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அத்தியாவசிய பொருட் கள் ரேசன் கடைகளுக்கு எடுத்து செல்ல காவல்துறை மூலம் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டத்தால் காய்கறிகள், பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைய ஏதுவாக அரசு பஸ்களில் கொண்டு செல்ல பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோருக்கு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மூலம் அறிவுரை வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவைகளை கொண்டு செல்லும் லாரிகளுக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story