காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரியில் முதல்–மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை
காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரியில் நேற்று முதல்–மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜைகள் செய்து வழ
குடகு,
காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரியில் நேற்று முதல்–மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
பருவமழைகர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்தது. பருவமழை ஆரம்பித்த முதல் நாளிலேயே தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மங்களூரு நகரமே வெள்ளத்தில் சிக்கியது.
இதனை தொடர்ந்து மலைநாடுகளான சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களிலும், பெங்களூரு உள்பட அனைத்து பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, துங்கபத்ரா, மல்லபிரபா, சுபா, வரகி உள்பட மேலும் சில அணைகள் முழு கொள்ளளவை எட்டின
குமாரசாமி வருகைகுறிப்பாக காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா தலைக்காவிரி பகுதியில் கனமழை இடைவிடாது கொட்டியது. இதனால் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணை நிரம்பியதால் காவிரியில் தமிழகத்துக்கு அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த நிலையில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் குடகு மாவட்டத்திற்கு வருகை தந்த முதல்–மந்திரி குமாரசாமி ஹாரங்கி அணையில் சிறப்பு பூஜைகள் செய்தார்.
பின்னர் அதிகாரி மடிகேரியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர் குடகு மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது குடகு மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய ரூ.300 கோடி தேவைப்படுகிறது என்று அதிகாரிகள் அவரிடம் எடுத்து கூறினார்கள். அப்போது அவர் குடகு மாவட்டத்தில் மழைசேதங்களை சரி செய்ய முதல்கட்டமாக ரூ.100 கோடி நிதியை விரைவில் ஒதுக்குவதாக கூறினார்.
தலைக்காவிரியில் சிறப்பு பூஜைஇந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் பின்னர் அவர் ஹாரங்கி அணையின் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார். இந்த நிலையில் நேற்று காலை முதல்–மந்திரி குமாரசாமி காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரிக்கு சென்று அங்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.
இந்த பூஜையில் அவருடைய மனைவி அனிதா குமாரசாமி, மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடகு மாவட்டத்தை புறக்கணித்துவிட்டதாக கூறிய சிறுவனை அழைத்து பேசிய குமாரசாமி
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா நாபொக்லு அருகே உள்ள எம்மேமாடு பகுதியை சேர்ந்தவன் பதா(வயது 13). இந்த சிறுவன் பேசிய வீடியோ காட்சிகள் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதில் குடகு மாவட்டத்தை ஆட்சியாளர்கள் புறக்கணித்து விட்டதாகவும், குடகு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தான். மேலும் காவிரி ஆற்றின் பிறப்பிடமான தலைக்காவிரியில் இதுவரை இருந்த முதல்–மந்திரிகள் யாரும் சிறப்பு பூஜை செய்யவில்லை என்றும் கூறினான்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மடிகேரியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, சிறுவன் பதாவை, முதல்–மந்திரி குமாரசாமி அங்கு வரவழைத்து அவனை சந்தித்து பேசினார். அப்போது குடகு மாவட்டத்தில் உள்ள சில முக்கிய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கோரி குமாரசாமியிடம், பதா கோரிக்கை விடுத்து மனுவை வழங்கினான். அந்த மனுவை பெற்றுக் கொண்ட குமாரசாமி, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு தலைக்காவிரியில் முதல்முறையாக பூஜை செய்த முதல்–மந்திரி
காவிரி ஆற்றின் பிறப்பிடமான குடகு மாவட்டம் மடிகேரியில் உள்ள தலைக்காவிரியில் நேற்று காலை முதல்–மந்திரி குமாரசாமி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். 25 ஆண்டுகளுக்கு பிறகு தலைக்காவிரியில் முதல்–மந்திரியாக இருப்பவர் தற்போது தான் பூஜை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு முதல்–மந்திரியாக இருந்த ஜே.எச்.பட்டீல் தலைக்காவிரியில் சிறப்பு பூஜை செய்திருந்தார்.