லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது: நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு


லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது: நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி இழப்பு
x
தினத்தந்தி 21 July 2018 4:15 AM IST (Updated: 21 July 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதன் காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி வரை இழப்பு ஏற்படும் என சம்மேளன தலைவர் குமாரசாமி தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் இன்று (நேற்று) அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு டெல்லியில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன், மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய 3 மாதம் கால அவகாசம் கேட்டு உள்ளார்.

அப்போது எங்கள் தரப்பில், நாங்கள் 3 மாத காலத்திற்கு முன்பே வேலை நிறுத்த போராட்டம் குறித்து அரசிடம் தெரிவித்து இருந்ததாகவும், தற்போது நாளை (நேற்று) வேலைநிறுத்த போராட்டம் தொடங்க உள்ள நிலையில் காலஅவகாசம் கேட்பதை ஏற்கமுடியாது என நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக இன்று (நேற்று) காலை முதல் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதில் 32 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர் சங்கங்கள், தாலுகா லாரி உரிமையாளர் சங்கங்கள் முழுமையாக கலந்து கொள்கின்றன. எனவே தமிழகம் முழுவதும் இன்று(நேற்று) முதல் 4½ லட்சம் சரக்கு வாகனங்கள் ஓடவில்லை.

வடமாநிலங்களுக்கு கடந்த 15-ந் தேதி முதல் சரக்கு முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டதால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் சுமார் 15 ஆயிரம் லாரிகள், 16-ந் தேதி முதலே நிறுத்தப்பட்டு விட்டன.

இன்று (நேற்று) காலை முதல் அனைத்து பகுதிகளிலும் சரக்கு போக்குவரத்து அடியோடு முடங்கி உள்ளது. எங்களின் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்தத்தை கைவிடமாட்டோம். இதன் காரணமாக தமிழகத்தில் நாள்ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.250 கோடி இழப்பு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நேற்று நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வாங்கிலி தலைமையில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் சீரங்கன், சங்க செயலாளர் அருள், தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் கார்த்தி மற்றும் சங்கத்தினர் நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்கச்சாவடியில் அந்த வழியாக இயக்கப்பட்ட சில லாரிகளின் டிரைவர்களிடம் வேலைநிறுத்த போராட்டத்திற்கான நோட்டீசை வழங்கினர்.

மேலும் வேலைநிறுத்த போராட்டத்திற்கான அவசியம் குறித்து அவர்களிடம் எடுத்து உரைத்ததோடு, லாரிகளை இயக்காமல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

Next Story