வைகையாற்றில் பெண்கள் துணி மாற்ற தனி அறை கட்ட கலெக்டர் உத்தரவு
திருப்புவனம் பேரூராட்சி பகுதியில் வைகையாற்றில் பெண்கள் துணி மாற்ற தனி அறை கட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருப்புவனம்,
திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்திற்கு மாவட்ட கலெக்டர் லதா நேற்று வந்து அலுவலக பணிகளை ஆய்வு செய்தார். அதன் பின்னர் பேரூராட்சியில் உள்ள 4–வது வார்டு பகுதியில் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்தபோது அப்பகுதி மக்கள் அந்த பகுதியில் குடிநீர் சரிவர வரவில்லை என்று கூறினார். மேலும் அடுத்த தெருவில் உள்ள சின்டெக்ஸ் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றால் அப்பகுதி மக்கள் அதிகமாக தண்ணீர் பிடிப்பதால் எங்களுக்கு மிகவும் சிரமம் உள்ளதாக கூறினர்.
இதையடுத்து அந்த பகுதிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடிதண்ணீர் கிடைக்க மாற்று ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்படும் பொருட்களை போட வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
மேலும் திருப்புவனம் வைகையாற்றில் உள்ள திதி கொடுக்கும் பொட்டல் பகுதியில் பெண்கள் குளித்து விட்டு துணி மாற்ற போதிய இடம் இல்லாமல் சிரமப்படுவதால் அந்த இடத்தில் ஒரு பெண்களுக்காக தனிஅறை கட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் அந்த பகுதியில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் லதாவிடம் வயதான பெண்மணி ஒருவர் தனக்கு ஆதரவு இல்லை என்றும் கூறி அவரிடம் தற்சமயம் பண உதவி கேட்டார்.
இதையடுத்து அவருக்கு ரூ.500 கொடுத்து கலெக்டர் உதவி செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டருடன் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா, உதவி செயற்பொறியாளர் குமரகுரு, திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.