லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் மாவட்டத்தில் ரூ.25 கோடி சரக்குகள் தேக்கம்


லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் மாவட்டத்தில் ரூ.25 கோடி சரக்குகள் தேக்கம்
x
தினத்தந்தி 21 July 2018 4:30 AM IST (Updated: 21 July 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தேனி மாவட்டத்தில் ரூ.25 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அரசுக்கு ரூ.5 கோடி அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி,

நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வர வேண்டும், சுங்கச்சாவடி வரி உயர்த்தப்பட்டதை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இந்த வேலை நிறுத்தம் காரணமாக நேற்று பெரும்பாலான லாரிகள் ஓடவில்லை. வெளி மாநிலங்களுக்கு சரக்குகள் ஏற்றி செல்லப்படவில்லை.

போடி பகுதியில் இருந்து ஏலக்காய், காபி, இலவம்பஞ்சு, தேயிலை போன்ற பொருட்களும், கம்பம் பகுதியில் இருந்து திராட்சை, வாழைப் பழங்களும், வருசநாடு, மயிலாடும்பாறை, சின்னமனூர் பகுதிகளில் தேங்காய், கொட்டை முந்திரி ஆகியவையும் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் காய்கறிகள், பருத்தி பஞ்சு, நூல் பண்டல்கள், துணி போன்ற பல்வேறு விதமான பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன.

இந்த வேலைநிறுத்தம் குறித்து தேனி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுகுமாறன் கூறியதாவது:–

லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். டீசல் விலை உயர்வு காரணமாக லாரி வாடகை அதிகரிக்கிறது. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. தேனி மாவட்டத்தில் சுமார் 4,500 லாரிகள் உள்ளன. இதில் 60 சதவீதம் லாரிகள் வெளி மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்வதும், அங்கிருந்து சரக்குகளை ஏற்றி வருவதற்கும் பயன்படுகிறது. 40 சதவீத லாரிகள் தமிழக பகுதிகளுக்குள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. பக்கத்து மாவட்டங்கள், மாநிலங்களுக்கு சென்று திரும்பிய லாரிகள் மட்டும் நேற்று காலையில் தேனிக்கு வந்தது. வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரிகள் அந்தந்த பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.25 கோடி வரை சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. அதுபோல், தேனி மாவட்டத்தில் உள்ள லாரிகளுக்கு டீசல் நிரப்புதல், வரி செலுத்துதல், சுங்கச்சாவடி வரி செலுத்துதல் போன்றவை மூலம் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி அளவில் வருவாய் கிடைக்கும். இதன்படி வேலை நிறுத்தம் காரணமாக அரசுக்கு ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story